நாட்டில் பொருட்களின் விலை உயர்வு அரசாங்கத்தின் தவறு அல்ல என மின்சக்தி அமைச்சரான காமினி லோகுகே தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், அது ஒன்றும் அரசாங்கத்தின் தவறு அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
டொலரின் மதிப்பு குறைவு, பால்மா , கோதுமை மா மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வால் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
எவ்வாறாயினும், அதில் எதுவுமே அரசாங்கத்தின் தவறல்ல, தற்போதைய பொருளாதார நிலைமையால், உலக சந்தை விலைகள் அதிகரிக்கும் போது அரசாங்கத்தால் சலுகைகளை வழங்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூட அரசாங்க நிதியுடன் இயங்குகிறது. அதன் இழப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும். லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயுவை விற்பனை செய்கிறது. ஆனால் அரசாங்கம் இழப்பை ஏற்கிறது.
மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எப்போதுமே ஒரு வழியைத் தேடும். இருப்பினும் நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக தொற்று நோயை எதிர்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

