தமிழீழத்தின் முன்னணிக் கலைஞர்களான நாட்டுப்பற்றாளர் சதா வேல்மாறன், இசைக்கலைமணி வர்ண ராமேஸ்வரன் ஆகியோரின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு. 11.10.2021 சுவிஸ்

41 0

தமிழீழ விடுதலை எழுச்சிப் பாடல்களுக்கு தமது இசைக்கலையினால் உணர்வேற்றிய கலைஞர்களின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வானது 11.10.2021 திங்கள் அன்று பேர்ண்; மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடரேற்றலுடன் அகவணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

ஓர் இனத்தின் விடுதலைப்போரில் கலையும் ஒரு போர்க்கருவியே என்பதனை உணர்ந்து தம்மைத் தமிழீழக் கலைபண்பாட்டுக்கழகத்துடன் இணைத்து விடுதலைக்கு உரமூட்டிய இக் கலைஞர்களின் வணக்க நிகழ்வில் கொரோனா நோய்த்தொற்றுப் பேரிடருக்கு மத்தியிலும் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான நடைமுறைகளைப்பேணி வணக்கம் செலுத்த மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இவ் வணக்கநிகழ்வில் நாட்டுப்பற்றாளர் சதா வேல்மாறன், இசைக்கலைமணி வர்ண ராமேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து விடுதலைப்போருக்கு வலுச்சேர்த்த போராளிக் கலைஞர்கள் தமது நினைவுகளை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொண்டிருந்தனர். மேலும் இவர்களினால் உருவாக்கப்பட்ட பாடல்களினையும் சுவிஸ் வாழ் கலைஞர்களும் கவிவணக்கங்களாக இனஉணர்வாளர்களும் காணிக்கையாக வழங்கப்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இசையினால் எமது உணர்வைத் துடித்தெழ வைத்த இக் கலைஞர்களின் விடுதலைக்கானங்கள் என்றும் எமது மண்ணின் விடுதலைக்கான கதவுகளை அசைக்கும் என்ற நம்பிக்கையுடனும், எமது தேசம் விடுதலைபெற நாமும் அயராது உழைப்போம் என்ற உறுதியுடனும் நம்புங்கள் தமிழீழம் பாடல் அனைவராலும் பாடப்பட்டதோடு தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள்; நிறைவுபெற்றன.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.