சீனாவில் இடைவிடாமல் கொட்டும் மழையால் வெள்ளம்: 15 பேர் பலி

33 0

இந்த கனமழை மற்றும் வெள்ளத்தால் சுமார் 2 லட்சத்து 38 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாகின.

சீனாவில் பருவநிலை மாற்றம் காரணமாக புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நடக்கின்றன.

கடந்த ஜூலை மாத இறுதியில் சீனாவின் மத்திய மாகாணம் ஹெனானில் உள்ள ஷெங்ஜோ நகரில் 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் கன மழை கொட்டி தீர்த்தது.

இதனால் அந்த நகரமே மொத்தமாக வெள்ளத்தில் மூழ்கியது. இதில் 300-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

இந்த நிலையில் சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஷான்சி மாகாணத்தில் கடந்த 2-ந்தேதி முதல் இடைவிடாமல் கனமழை கொட்டி வருகிறது.

கடந்த 5 நாட்களில் மட்டும் அந்த மாகாணத்தில் அக்டோபருக்கான சராசரி மாதாந்திர மழையை விட 3 மடங்கு அதிகமாக பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடைவிடாமல் கொட்டி தீர்க்‌கும் பேய் மழையால் ஷான்சி மாகாணத்தில் உள்ள 70-க்கும் மேற்பட்ட நகரங்களில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 2-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை மாகாணத்தின் சராசரி மழைப்பொழிவு 119.5 மி.மீ. அளவுக்கு பதிவானதாக மாகாண வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான நகரங்கள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கின்றன. இதில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

மேலும் இந்த கனமழை மற்றும் வெள்ளத்தால் சுமார் 2 லட்சத்து 38 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாகின.

நேற்றைய நிலவரப்படி மழை, வெள்ளத்தினால் ஷான்சி மாகாணத்தில் சுமார் 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மழை, வெள்ளத்தினால் இதுவரை 15 பேர் பலியானதாகவும், 3 மாயமாகி இருப்பதாகவும் மாகாண அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டும் இன்றி இந்த இயற்கை பேரிடரால் 780 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார்ரூ.6 ஆயிரம் கோடி) அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு முழுவீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.