பெல்சியத்தில் எழுச்சிகரமாக நடைபெற்ற 2ம் லெப்.மாலதியின் நினைவு நாள்.

38 0

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் 2ம் லெப்.மாலதியின் நினைவு நாளும் பெல்சியத்தில் எழுச்சிகரமாக நடைபெற்றது. தமிழீழ விடுதலைப்போரில் பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் என எதிரியானவன் ஒருபோதும் பாகுபாடு பார்த்தது கிடையாது. நாம் தமிழர்கள் எனும் ஒற்றைக் காரணத்தின் அடிப்படையிலே பன்னெடும் காலமாக எம்மீது இனவழிப்பினை கட்டவிழ்த்து இனச்சுத்திகரிப்பின் ஊடாக எம்மை அடிபணிய வைக்க முடியும் என எண்ணிக்கொண்டு பல அடக்குமுறைகளை பிரயோகித்து வருகின்றான்.

எனவே தான் ஆண்கள் பெண்கள் என எமது விடுதலைப்போராட்டத்தில் ஏராளமானோர் தம்மை அற்பணித்தனர். எமது தேசியத்தலைவரின் வழிகாட்டலின் கீழ் எமது தாயகம் விடுதலைபெற்று சுதந்திர தமிழீழம் அமைய வேண்டும் எனும் பேரவாவோடு தம் உயிர் கொடுத்தே போராட்டத்தினை வலுச்சேர்த்தனர். தமிழீழ மக்களை காக்கவென வானேறி வந்து சொல்லணா அட்டூழியங்களை புரிந்துகொண்டிருந்த இந்திய நாசகாரப் படைகளுக்கு எதிராக 1987.10.10 அன்று களமாடி தான் கொண்டிருந்த ஆயுதத்தினை தன் நெஞ்சுரம் கொண்டு காத்து ‘என்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ’ என தான் விழுப்புண் அடைந்த நேரத்திலும் திடமாக சீறிப்பாய்ந்தவள் 2ம் லெப் மாலதி . அப்போராட்டத்தில் முதற்பெண் மாவீரராக விதையாகி தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளுக்கும் வித்தாகிப் போனார்.

பெல்சியம் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பில் அன்வேர்ப்பன் மாநிலத்தில் தமிழீழ மக்கள் பெரும் எழுச்சியாக 2ம் லெப் மாலதியினை நினைவு கூர்ந்து தமிழீழ பெண்கள் எழுச்சி நாளிலும் கலந்து கொண்டனர்.
“பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்கு முறைகளிலிருந்தும் விடுதலைபெற்று ஆண்களுடன் சமத்துவமாக கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல்”

– தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.