அடுத்த 12 மாதங்களில் இலங்கை செலுத்தவுள்ள கடன் தொகையை வெளியிட்டார் ஹர்ஷ

202 0

சர்வதேசத்திடம் நாம் பெற்றுக்கொண்டுள்ள கடன்களில்  அடுத்த 12 மாதங்களில் 7242 மில்லியன் டொலர்களை செலுத்தியாக வேண்டும், ஆனால் எமது கையிருப்பில் 2581 மில்லியன் அமெரிக்க டொலர்களே உள்ளது, ஏனைய தொகையை நாம் எவ்வாறு செலுத்தப்போகின்றோம் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார். தேசிய மற்றும் சர்வதேச கடன்களை சமாளிக்க  குறுகிய காலத்தில் 54ஆயிரத்து 900 கோடி ரூபா அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை, 2021ஆம் ஆண்டு நடுப்பகுதியின் நிதி நிலைமைகள் தொடர்பான அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்ற வேளையில் அதில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் அரச நிதி குறித்த பாரிய நெருக்கடி நிலையொன்று காணப்படுகின்றது, 2021ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் ஜூலை மாதம் வரையில் அரசின் மொத்த வருமானமானது 79 ஆயிரத்து 800 கோடியாகும். ஆனால் மொத்த செலவீனமானது ஒரு இலட்சத்து 150 கோடி ரூபாவாகும்.

கொரோனா காரணங்களை கூறினாலும், 2009 ஆம் ஆண்டு இடைவெளியானது 522பில்லியனாக இருந்தது,ஆனால் தற்போது வரவு செலவு திட்ட இடைவெளி 94 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இது குறித்து கவனம் செலுத்த வேண்டும், அதற்கான தீர்வுகளை எவ்வாறு காண்பது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும், தேசிய மற்றும் சர்வதேச கடன்களை சமாளிக்க இந்த குறித்த காலகட்டத்தில் மாத்திரம் 54ஆயிரத்து 900 கோடி ரூபா அச்சடிக்கப்பட்டுள்ளது. இதில் கருப்பு வெள்ளை பணமும் உள்ளடங்கும்.

நாம் கடன்களை பெற்றுக்கொண்டுள்ளோம் என விமர்சிக்கின்றனர், ஆம் நாம் கடன்களை பெற்றுக்கொண்டோம் என்பது உண்மையே, எமது ஆட்சியில் அறுபது மாதங்களுக்கு 5400 பில்லியன் ரூபா கடன்களை  பெற்றிருந்தோம், ஆனால் கோட்டாபய ராஜபக் ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையில் 3750 பில்லியன் ரூபா கடன்களை பெற்றுள்ளது,நாம் அறுபது மாதங்களுக்கு நாம் பெற்ற கடன்களை இவர்கள் 18 மாதங்களில் நெருங்கியுள்ளனர்.ஆகவே தலா நபரின் கடன்களில் மேலதிகமாக 1 இலட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரித்துள்ளனர்.

இவர்களின் ஆட்சியில் விலை குறையும் என மக்கள் நினைத்தாலும் அதற்கு மாறாகவே இடம்பெற்றது, இந்நிலையில் அவசியமான துறைகளுக்கு வரிகளை செலுத்தாது சலுகைகளை கொடுத்துள்ளனர். குறிப்பாக கெசினோவில் இருந்து கிடைக்க வேண்டிய 267 கோடி ரூபா அரசாங்கம் இணைத்துக்கொள்ளவில்லை என கோப் குழு தெரிவித்துள்ளது, கோடிஸ்வரர்களுக்கு சலுகைகளை கொடுத்து அப்பாவி மக்களின் வயிற்றில் அடித்துள்ளது இந்த அரசாங்கம்.

இன்று எமது வெளிநாட்டு கையிருப்பு 28வீதத்தால் குறைவடைந்துள்ளது. கடந்த காலங்களை மாத்திரம் விமர்சித்துக்கொண்டு இருக்காது டொலர் பெறுமதியை தக்கவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், அடுத்த 12 மாதங்களில் செலுத்த வேண்டிய மொத்த  சர்வதேச கடனானது 7242 மில்லியன் டொலர்களாகும், ஆனால் எமது கையிருப்பில் 2581 மில்லியன் அமெரிக்க டொலர்களே உள்ளது, ஏனைய தொகைக்கு நாம் என்ன செய்யப்போகின்றோம், இதற்கு அரசாங்கம் பதில் தெரிவிக்க வேண்டும்.

இந்த கடன்களை செலுத்த அங்கீகாரம் இல்லாத, அடையாளம் இல்லாத நபர்களை கொண்டு கடன்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் அமைச்சரவையில் அனுமதித்துள்ளது, அதற்கு மேலதிகமாக ஓமானில் இருந்து  கடன்களை கேட்டும் அவர்கள் அதனை அனுமதிக்கவில்லை. மாறாக மன்னார் எண்ணெய் வளத்தில் ஒரு பங்கினை கேட்டுள்ளனர்.

இவ்வாறான நெருக்கடியான நிலையில் தான் அரசாங்கம் தீர்மானங்களை எடுத்து நாட்டை நெருக்கடிக்குள் தள்ளிக்கொண்டுள்ளது. அரசாங்கம் எந்த பாதையில் பயணித்துக்கொண்டுள்ளது என்பது கூட தெரியாது தடுமாறிக்கொண்டுள்ளது. தீர்மானங்களை எடுத்து முடியாத நிலையில் அமைச்சர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நெருக்கடிக்களுக்கு அரசாங்கம் எவ்வாறு தீர்வு காண்பது என்பதை அடையாளம் கண்டு மீட்சிபெற வேண்டும் என்றார் .