தமிழ்க்கட்சிகள் ஒருங்கிணைந்த அரசியலை முன்னெடுப்பதென்பது சாத்தியமானதே-கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன்.

315 0

 கடந்த காலத்தில் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையில்லாமல் விடுதலை செய்த வரலாறுகள் இருக்கின்றன.        

      —————                     –

                                                       காணாமல் போனோர் அலுவலகம் கண் துடைப்புக்கு மாத்திரமே இயங்குகிறது.

——————–

                                                             தமிழ்த்தேசியக் கட்சிகளின் மனநிலைகள் பக்குவப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் போராட்டங்களை நடத்தினோம், எதற்காக அரசியற் கட்சிகளை உருவாக்கினோம் என்பதை தமிழ்த் தரப்பிலுள்ள ஒவ்வொருவரும் இதய சுத்தியுடன் சிந்திப்பார்களாயின் ஒருமித்த கருத்தையுருவாக்கி ஒற்றுமையாகச் செயற்படுவது பெரிய விடயமல்ல. குறுகிய சுயநல போக்குகளை ஒதுக்கிவிட்டு ஒற்றுமையாக தமிழ்மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்கக்கூடிய சிந்தனையுடன் தமிழர்களும் தமிழ்க்கட்சித் தலைமைகளும்

செயற்படுவார்களாயின்      தமிழர்களுக்கான விடுதலையைப் பெற்றுக்கொள்வதென்பது பெரிய விவகாரமல்ல. உலகத்தில் பல விடுதலைகள் இவ்வாறுதான் கிடைக்கப்பெற்றுள்ளது  என தமிழீழ விடுதலை இயக்கத்தின் உப தலைவரும் கல்முனை மாநகர சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஹென்றி மகேந்திரன்   அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.


1) கேள்வி : ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா ?

பதில் : 2009 ஆம் ஆண்டு யுத்தம் மெளனிக்கப்பட்டதன் பிற்பாடு யுத்தக் குற்றம், இனப்படுகொலை, மனித உரிமைகள் மீறப்பட்டமை உட்பட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் விவகாரங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் விவாதப்பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது. 2009 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரைக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் பல தீர்மானங்கள் எட்டப்பட்டன, அதில் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானங்களும் அடங்கும்.அதற்கு மேலதிகமாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவை கொண்டு வந்த தீர்மானங்களில் இலங்கையரசாங்கம் அனுசரணையாளராக கலந்துகொண்டு தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுவோம் என உறுதிமொழிகள் வழங்கப்பட்ட விவகாரங்களும் உள்ளடங்கும். இருந்தபோதிலும் காலத்திற்கு காலம் ஐ.நா பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இற்றைவரையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.அந்த அடிப்படையில், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாய நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை தொடர்ச்சியாக வலியுறுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால் எல்லாவற்றுக்கும் பொதுவான பிரச்சினையாக இருக்கின்ற அடிப்படை உரிமைத் தீர்வு தொடர்பாக தமிழ்க்கட்சிகளால் இதுவரைக்கும் ஓர் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.இந்த அடிப்படையில், காலத்துக்குக் காலம் ஒவ்வொரு கட்சியும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் தாங்கள் தாங்கள் கோருகின்ற அறிக்கைகளைத் தனித்தனியா சமர்ப்பித்திருந்தார்கள். இற்றைக்கு பன்னிரெண்டு வருடங்களுக்குப் பிற்பாடு இலங்கையில் நடந்த விவகாரங்களுக்கு ஐ.நா மனித உரிமைப் பேரவையில் தமிழ்க் கட்சிகள் தனியத் தனிய கோரிக்கைகளை முன் வைக்காமல் ஒற்றுமையாக ஒரே கோரிக்கையினை ஒன்றாக வைக்க வேண்டிய தேவையுள்ளது. இது காலத்தின் கட்டாயம்.

மனித உரிமைப் பேரவையைப் பொறுத்தவரையும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி, நியாயம் வெளிக்கொணரப்பட வேண்டும் என்ற அடிப்படையில் எதிர்வரும் காலங்களில், தமிழ்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து கையொப்பமிட்டு ஒற்றுமையாக ஐ.நா ஆணையாளருக்கு  கோரிக்கையை விடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

2) கேள்வி : இலங்கையரசாங்கம் சடுதியாகத் தமிழ்த்தரப்புடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முயற்சிப்பதன் பின்னணி ?


பதில் : கடந்த பாராளுமன்றத் தேர்தல் ஊடாக இப்போது வந்திருக்கின்ற அரசாங்கம் ஒரு புதிய அரசியலமைப்பை இந்த நாட்டுக்கு உருவாக்க வேண்டுமென்ற பிரதான கோரிக்கையினை முன்வைத்திருந்தது. அதற்கு இணங்க நாட்டு மக்கள் பெருவாரியான அங்கீகாரத்தை வழங்கி ஆட்சிபீடத்தில் அமர்த்தியிருக்கிறார்கள். இந்த நிலையில், ஆட்சிக்கு வந்தவுடன் புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இதுவரையும் எடுக்கப்படவில்லை. கிடப்பில் போடப்பட்டதாகவே இருக்கிறது.

தமிழ்மக்களை, தமிழ்த் தலைமைகளை ஏமாற்றுவதற்கும் காலத்தைக் கடத்துவதற்குமாக புதிய அரசியலமைப்பை கையாண்டிருக்கிறார்கள். ஆட்சியேறிய அரசாங்கங்கள், கடந்த கால அனுபவங்கள் போன்றே கோட்டாபாய ஆட்சியும் காலம் கடத்தப் போகிறதா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது. எது எப்படியாக இருந்தாலும் இலங்கையில் காலத்திற்கு காலம் ஆட்சியேறுகின்ற அரசாங்கத்தோடு இணைந்துதான் தீர்வு காணப்பட வேண்டும் என்ற யதார்த்த நிலையடிப்படையில் கோட்டாபய அரசாங்கம் தமிழ்க்கட்சிகளை சந்திக்க அழைத்துள்ளது.

ஐ.நா.மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்திற்கு பின்னர் தமிழர் தாயகத்தில் தமிழினத்துக்கு எதிராக இலங்கையரசால் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பு, தொல்லியல் சார் நடவடிக்கைகள், நினைவேந்தல்களுக்கான தடைகள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் அடிப்படையிலான கைதுகள், சட்ட நடவடிக்கைகள், தடுத்து வைத்தல், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகங்களில் இராணுவ அதிகாரிகளை நியமித்தல், காணாமலாக்கப்பட்டோரை தேட வேண்டிய அவசியம் இல்லை என்ற அரசின் நிலைப்பாடு, பொத்துவில் – பொலிகண்டி மக்கள் பேரெழுச்சியின் பின்னரான தொடர்ச்சியான விசாரணைகள், அவசரகால சட்டத்தால் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் அபாய நிலைகள் போன்றவற்றுக்கு அரசாங்கத்தின் நல் எண்ண நடவடிக்கையில் தீர்வு கிடைத்தால் மாத்திரமே தமிழ்மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை பிறக்கும். தமிழர்கள் புறக்கணிக்கப்படாமல் நியாயங்கள் வழங்கக்கூடிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் ஏனைய விடயங்களை கதைப்பதற்கும், நாங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை முன்னெடுத்தேயாக வேண்டும்.



கடந்த காலங்களில் சுதந்திரமடைந்ததன் பிற்பாடு பண்டா செல்வா, டட்லி செல்வா ஒப்பந்தம், ஜெ.ஆர் ஜெயவர்த்தனவின் வட்டமேசை மாநாடு, திம்பு, ஒஸ்லோ பேச்சுவார்த்தை, மஹிந்த தலைமையிலான பேச்சுவார்த்தை உட்பட பல கலந்துரையாடல் சந்திப்புகள் மக்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளன. ஒப்பந்தம் எழுதப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பிலும், கிழித்தெறியப்பட்ட வரலாறும் இருக்கிறது. ஒப்பந்தம் எழுதப்பட்டும் நடைமுறைக்கு வராத வரலாறுகளும் இருக்கின்ற இந்த வேளையில், தமிழ் மக்களைப் பொறுத்தவரைக்கும் இந்த அரசாங்கம், ஐக்கிய இலங்கைக்குள் ஒருமித்த நாட்டிற்குள் ஒரு நியாயத் தீர்வை வழங்குமா என்பது அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பார்த்தே அறிந்துகொள்ள வேண்டிய தேவையுள்ளது. வெறுமனே 1972 மற்றும் 1978 ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் புதிய அரசியலமைப்பில் இடம்பெறக்கூடாது. ஆக
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது சிறுபான்மையினங்கள் புறக்கணிக்கப்படாததாக சமத்துவமாக வாழக்கூடிய சட்டமாக இருக்க வேண்டும்.

3) கேள்வி : இன அழிப்பு விவகாரத்தை சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக்க எவ்வாறான உத்திகளை கையாள வேண்டும் ?

பதில் : ஐ.நா மனித உரிமைப் பேரவையானாலும் ஐ.நா சபையானாலும் ஐரோப்பிய ஒன்றியமானாலும், வல்லரசு நாடுகளாக இருந்தாலும், இவ்வாறு எதுவாக இருந்தாலும் காலம் கடந்தாலும் இனிமேலாவது ஒருமித்துப் பயணித்து ஒற்றுமையாக பேச்சுவார்த்தை நடத்துவதுதான் சிறப்பாக இருக்கும்.

4) கேள்வி : தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் அரசாங்கம் நிபந்தனையின்றி விடுதலை செய்வதென்பது சாத்தியமானதா ?

பதில் : கடந்த காலத்தில் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையில்லாமல் விடுதலை செய்த வரலாறுகள் இருக்கின்றன. 1971 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜெ.வி.பி கிளர்ச்சிக் கலவரத்தின்போது கைது செய்யப்பட்ட கைதிகளை எந்தவித நிபந்தனையும் இன்றி ஜெ.ஆர்.ஜெயவர்த்தன விடுதலை செய்தார். அதற்கு பிற்பாடு பிரேமதாஸ ஆட்சி செய்த காலத்தில் ஜெ.வி.பி இரண்டாவது தடவை கிளர்ச்சிகள் செய்தபோது சிறைப்பிடிக்கப்பட்ட கைதிகளை சந்திரிக்கா அம்மையார் எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்துள்ளார். அதற்கு மேலதிகமாக வடக்கு கிழக்கில் நடந்த ஆயுத ரீதியான போராட்டத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட    தமிழ்க்கைதிகள் இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட வேளையில் விடுவிக்கப்பட்டனர். ஆக இப்படிப்பட்ட வரலாறுகள் இருக்கும் நிலையில், இது ஒரு பெரிய விடயமல்ல. கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான தமிழ், சிங்கள இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் இப்போது நூற்றுக்கும் குறைவான தமிழ் இளைஞர்களே சிறைகளில் வாழ்கின்றனர். இவர்களைப் பொறுத்த வரைக்கும் நீண்டகாலம் சிறையில் வாடிவிட்டார்கள். இவர்கள் பொதுவான விடயங்களுக்காகவே சிறைப்பிடிக்கப்பட்டார்கள். அந்த அடிப்படையில் தமிழரசியல் கைதிகள் அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்படுவது பெரிய விடயமல்ல.

5) கேள்வி : மாகாண சபைத் தேர்தல் எவ்வாறான முறையில் நடத்தப்பட வேண்டும் ?

பதில் : சிறுபான்மை தமிழ்த்தரப்பை பொறுத்தவரை விகிதாசார முறையிலேயே நடைபெற வேண்டும். நாடு பூராகவும் பிரிந்து பிரிந்து வாழுகின்ற சிறுபான்மையின தமிழ் இன பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு விகிதாசாரமே பொருத்தமான தெரிவாகும்.

6) கேள்வி : வடக்கு கிழக்குத் தாயகத்தில் ஒருங்கிணைந்த அரசியலை முன்னெடுப்பதென்பது சாத்தியமானதா ?

பதில் : தமிழ்த்தேசியக் கட்சிகளின் மனநிலைகள் பக்குவப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் போராட்டங்களை நடத்தினோம், எதற்காக அரசியற் கட்சிகளை உருவாக்கினோம் என்பதை தமிழ்த் தரப்பிலுள்ள ஒவ்வொருவரும் இதய சுத்தியுடன் சிந்திப்பார்களாயின் ஒருமித்த கருத்தையுருவாக்கி ஒற்றுமையாகச் செயற்படுவது பெரிய விடயமல்ல. குறுகிய சுயநல போக்குகளை ஒதுக்கிவிட்டு ஒற்றுமையாக தமிழ்மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்கக்கூடிய சிந்தனையுடன் தமிழர்களும் தமிழ்க்கட்சித் தலைமைகளும்

செயற்படுவார்களாயின்     தமிழர்களுக்கான விடுதலையைப் பெற்றுக்கொள்வதென்பது பெரிய விவகாரமல்ல. உலகத்தில் பல விடுதலைகள் இவ்வாறுதான் கிடைக்கப்பெற்றுள்ளது என்றடிப்படையில் தமிழ்க்கட்சிகள் ஒருங்கிணைந்த அரசியலை முன்னெடுப்பதென்பது
சாத்தியமானதே.

7) கேள்வி : காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களினால் 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லையே ?

பதில் : காணாமல் போனோர் அலுவலகத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களே வழங்கப்பட்டுள்ளன. வெறுமனே ஒரு அறிக்கையைத் தயாரிப்பதாக இருந்தாலும், முழுமையான நீதியான அறிக்கையை தயாரிப்பதற்குரிய ஏற்பாடுகள் அதில் இல்லை.
காணாமல் போனோர் அலுவலகம் வெறும் கண் துடைப்புக்கு மாத்திரமே இயங்குகிறதே தவிர அலுவலகத்திலிருந்து எடுக்கப்படும் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக இல்லை. காணாமல் போனோர் அலுவலகங்களினால் தமிழ் மக்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை.

8) கேள்வி : ஜெனீவா மனித உரிமைப் பேரவைகளில் பங்கேற்ற காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் பாதுகாப்புப் படை உளவுத் துறையினரால் கண்காணிக்கப்படுவதையும் சாட்சியாள உறவுகள் சித்திரவதை அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதையும் எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?

பதில் : ஒரு நீதியான விசாரணைகள் இடம்பெற வேண்டுமாக இருந்தால் சாட்சியாளர்கள் மீது எந்தவித அழுத்தங்களோ அச்சுறுத்தல்களோ இருக்கக்கூடாது. அப்படிப்பட்ட விவகாரங்கள் நடக்குமாக இருந்தால் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு பொருத்தமாக இருக்காது. இந்த விடயத்தில் அரசாங்கம் இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும். எந்தவித அழுத்தங்களும் இல்லாமல் சுயமாகவே சாட்சியாளர்கள் சாட்சியங்களை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.

9) கேள்வி : பொது நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்படுவதை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?

பதில் : பாதுகாப்புப் படைகளை பொறுத்தவரை அவர்களுக்கென்று நிறைவான வேலைகள் இருக்கிறது. அந்த அடிப்படையில் பொது நிறுவனங்களை பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்ததென்பது ஜனநாயக நாட்டில் பொருத்தமான செயற்பாடல்ல. எந்த நாடாக இருந்தாலும் ஜனநாயக ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் அபிப்பிராயமாகும்.

10) கேள்வி : கூட்டமைப்பிற்கு எவ்வாறான தகுதிகளையுடைய தலைமை வேண்டப்படுகிறது ?

பதில் : கடந்த காலங்களில் இருந்து இன்றுவரை தமிழ் மக்களின் அடிப்படைக் குறைகள் தீர்க்கப்பட்டதாக தெரியவில்லை. சுயநல போக்கினை விடுத்து பொதுநல அடிப்படையில் சிந்திக்கக்கூடிய, தமிழ்மக்களின் உரிமைத் தேவைகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய ஆளுமையுள்ள புதிய தலைமை உருவாக வேண்டிய தேவையுள்ளது. உலக நடைமுறை யதார்த்தத்தை புரிந்துகொண்டு அதற்கேற்றாற் போல் கிடைக்கக்கூடிய உரிமைகளைப் பெற்றுக்கொள்பவராகவும் ஒற்றுமையினை ஏற்படுத்துபவராகவும் இருக்க வேண்டும். அந்நபர் வடக்கு கிழக்கு மக்களால் ஓர் அரசியல் தலைவராக அங்கீகரிக்கப்படுபவராகவும் தமிழ்மக்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டு, நடைமுறையில் வென்றெடுக்கக்கூடிய தந்திரோபாய உத்திகளை கையாள்பவராகவும் இருக்க வேண்டும். எங்கள் கட்சித் தலைவர்களினுடைய தந்திரோபாய செயற்பாடுகள் இன்று வரைக்கும் வெற்றியடையாத நிலையில், தந்திரோபாயங்களை மாற்றிப் பெற்றுக்கொள்ளக்கூடிய தலைமையே வேண்டப்படுகிறது.

11) கேள்வி : தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ளவர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் ?

பதில் : வடக்குக் கிழக்குத் தமிழர்களின் உரிமையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நகர்வுகளை உலக நடைமுறைக்கேற்றவாறு நடைமுறைக்குச் சாத்தியமாகச் செயலாற்றக்கூடிய விடயங்களை உரிமை ரீதியான அணுகுமுறையில் கையாள வேண்டும்.

தமிழ்பேசும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டதனால்  தற்போது வறுமை நிலைக்கு வந்துவிட்டார்கள். ஆக வயிற்றில் பசியை வைத்துக்கொண்டு உரிமை பற்றிக் கதைப்பதில் பிரயோசனமில்லை. அந்த அடிப்படையில் கல்வி, தொழில்வாய்ப்பு, பொருளாதாரப் பிரச்சினை உட்பட ஒவ்வொரு பிரதேசத்திலும் எழக்கூடிய இன்னோரன்ன அத்தியாவசிய அடிப்படைப் பிரச்சினைகளையெல்லாம்
வேறொரு வகையில்
நிவர்த்திசெய்வதற்கு தந்திரோபாயங்களை வகுக்க வேண்டும். இவ்வளவு காலமும் உரிமைப் பிரச்சினையை மாத்திரம் கதைத்த நாங்கள், மக்களின் ஜீவனோபாய விடயத்தில் எந்தவித கவனமும் செலுத்தவில்லை.

இனிமேல் எந்த அரசாங்கம் வந்தாலும் அடிப்படைப் உரிமைப் பிரச்சினைகளையும் பொருளாதாரப் பிரச்சினைகளையும் அடையாளங்கண்டு, உலக நாடுகளின் ஓட்டத்தையும் கவனத்திற்கொண்டு அவர்களின் ஒத்துழைப்புடனும் அரசுடனும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடாத்தி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.
நேர்கண்டவர் : பாக்கியராஜா மோகனதாஸ்.