நாடாளுமன்றத்தின் நேற்றைய (07) அமர்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர கொலைக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய செல்வராசா கஜேந்திரன் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்குக்இ கிழக்கில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை முன்னிட்டு ஒரு இலட்ச ரூபாய் வழங்கப்பட்டிருந்தது. இதனைக் கொண்டு வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்தவர்கள் தற்போது நடு தெருவில் நிற்கிறார்கள் என்றார்.
இவர்களுக்கு இதுவரையில் நியாயம் கிடைக்கவில்லை. ஏஞ்சிய தொகையும் இதுவரையில் வழங்கவில்லை. இதனால் பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமையில் உள்ளனர் எனவும் தெரிவித்தார். இதேவேளை வவுனியா மாவட்டத்தில் கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட சிங்கள மக்களின் வீட்டுத் திட்டங்களை
மாத்திரம் மீள 79.8 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது இனவாத செயற்பாடு எனவும் தெரிவித்தார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் சிங்கள மக்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றால் எங்கே?
எப்போது ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த செல்வராசா கஜேந்திரன் நீர் போய் தேடிப்பாரும் என்றார். அங்கு கொலைகளை செய்துவிட்டு இங்கு (நாடாளுமன்றத்தில்) பொய்களை பேச வேண்டாமென தீலீபன் எம்.பி தெரிவித்ததைத் தொடர்ந்து. நீரும் பெரும் கொலைகளை செய்துள்ளாய் என கஜேந்திரனும் கூறினார்.

