தமிழகம் முழுவதும் உர தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

150 0
தமிழ்நாட்டை நீர் மிகை மாநிலமாக்கி, வேளாண்மையில் தமிழ்நாடு முதலிடம் பெறுவதற்கு அம்மாவின் அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது.

விவசாயப் பெருமக்கள் காலத்தே பயிர் செய்ய வசதியாக தேவையான விதை, உரம், யூரியா போன்ற இடுபொருட்களை குறித்த காலத்தில் தேவையான அளவு வழங்கியது.

ஆனால், கடந்த 5 மாத கால தி.மு.க. ஆட்சியில், வேளாண் இடுபொருட்கள் முதற்கொண்டு உரங்கள் வரை உழவுப் பணிகளுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்கப் பெறாமல் தமிழக விவசாயிகள் தவிக்கின்றனர். அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

குறிப்பிட்ட உரங்கள் எந்த கூட்டுறவு சங்கங்களிலும், விற்பனை கடைகளிலும் தேவையான அளவு இல்லை என்றும், தேவைப்படும் உரத்தின் விலை, கடைக்காரர்களாலும், விற்பனையாளர்களாலும் செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளி வருகின்றன.

ஆடி மாதம் விதைத்த நெல்மணிகள் முளைத்து பயிராக வளரக்கூடிய சூழ்நிலையில், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பயிரின் வளர்ச்சிக்கு உரங்கள் பெருமளவில் தேவைப்படும்.

இதை கருத்தில் கொண்டே அம்மாவின் அரசு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் பெருமக்களுக்குத் தேவைப்படும் விதை நெல், விவசாயிகளுக்குத் தேவைப்படும் உரங்கள் ஆகியவற்றை போதிய அளவு தயார் நிலையில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கியுள்ளது.

ஆனால், தி.மு.க. அரசோ, இந்த பருவத்திற்கு தேவையான உரங்களை முன்னெச்சரிக்கையாக வாங்கி இருப்பு வைத்ததாகவோ, தேவைப்படும் மாவட்டங்களுக்கு வழங்கியதாகவோ, அதற்குண்டான முயற்சிகளில் இறங்கியதாகவோ தெரியவில்லை.

எனவே, தமிழ்நாட்டில் வேளாண் பெருமக்களுக்குத் தேவைப்படும் உரங்கள் முழு அளவில் தட்டுபாடின்றி கிடைக்கவும், விவசாயிகள் உரத் தட்டுப்பாட்டால், குறிப்பிட்ட காலத்தில் பயிர்களுக்கு உரமிடாமல் கஷ்டத்தை அனுபவிக்கும் சூழ்நிலையை போக்கவும், அரசு விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.