அங்கன்வாடி மைய செயல்பாடுகளை அறிய நவீன வசதி

239 0

உடுமலையில் 130 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது.

உடுமலையில் 143 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக பிறந்தது முதல் 6 வயது குழந்தைகள் வரை ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள், சுகாதாரக்கல்வி, ஊட்டச்சத்தும் அளிக்கப்படுகிறது.
அதேபோல் பாலூட்டும் பெண்கள் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் ஊட்ட அறிவுறுத்தப்பட்டும் வருகின்றனர். இந்தநிலையில் அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் அனைத்தும்  ‘போஷான் டிராக்கர் ஆப்’ பயன்படுத்தி பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து உடுமலை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா கூறியதாவது:
உடுமலையில் 130 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது. அதில் குடும்ப நிர்வாகம், தினசரி உணவளித்தல், வீடுகள் பார்வை, திட்டமிடல், வளர்ச்சி கண்காணிப்பு, வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் இணை உணவு, தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய விவரம், அங்கன்வாடி மைய மேலாண்மை, மாதாந்திர முன்னேற்ற அறிக்கை போன்ற அனைத்து பணிகளும் ‘போஷான் டிராக்கர் ஆப்’பில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதனை சென்னை, புதுடெல்லி என எந்த பகுதியில் இருந்தும் கண்காணித்து அறிந்து கொள்ள முடியும். மேலும் துல்லியமாக அறிக்கை பெறவும், திட்ட சேவைகளை உரிய நேரத்தில் பயனாளிகளுக்கு கிடைக்கச் செய்யவும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.