மதுரையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை மாநகரில் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்துவது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
இன்னும் 4 மாத காலத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. இந்த நிலையில் மதுரை மாநகராட்சி பகுதியில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மதுரை மக்களின் குடிநீர் தேவைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் 1,296 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முல்லைப்பெரியாறில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை விரைந்து செயல்படுத்தி வருகிற 2023 திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளோம்.
மேலும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் மற்றும் முக்கிய வீதிகள் சேதமடைந்து காணப்படுகிறது. பாதாள சாக்கடை, புதிய குடிநீர் குழாய் பதிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. எனவே சேதமடைந்த சாலைகளை விரைவாக சீர் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்.
கடந்த 2011-ம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தபோது முதல்வர் ஜெயலலிதாவிடம் மதுரை மக்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்தோம். மதுரை மாநகராட்சி வளர்ச்சிக்கு 500 கோடி ரூபாய் வழங்க வேண்டும், மதுரையில் ரவுடிகள் அட்டகாசத்தை ஒழிக்க வேண்டும் என்று கேட்டோம். உடனடியாக மதுரை நகர வளர்ச்சிக்காக 250 கோடி ரூபாயை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்தார். ரவுடிகள் தொல்லையையும் ஒழித்தார்.
மதுரை நகருக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுமார் 5000 கோடிக்கு மேல் திட்டப்பணிகள் செய்யப்பட்டு உள்ளன.
எனவே மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் மக்கள் திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்திட தமிழக அரசு மதுரை மாநகராட்சிக்கு உடனடியாக 1,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இதே கோரிக்கையை மதுரையிலுள்ள அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கேட்டுப் பெற வேண்டும்.
மதுரையில் தற்போது ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த நடவடிக்கை தொடர வேண்டும். அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நல பணிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும்.
எனவே சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் மதுரை மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
மதுரையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

