பைஸர் தடுப்பூசி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட அண்மைய ஆய்வுகளின் பிரகாரம், அது 5 – 11 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் உடலில் கொவிட் – 19 வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்புசக்தியை மிகவும் சாதகமான மட்டத்தில் தோற்றுவித்துள்ளமை கண்டறியப்பட்டிருப்பதாக பைஸர் நிறுவனத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அல்பேர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.
கொவிட் – 19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகளில் ஒன்றான பைஸர் தடுப்பூசியை 5 – 11 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு பயன்படுத்துவது குறித்து பைஸர் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுவந்த ஆய்வுகளின் முடிவுகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி 5 – 11 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு 21 நாட்கள் இடைவெளியில் 10 மைக்ரோகிராம் என்ற அடிப்படையில் முதலாம் மற்றும் இரண்டாம்கட்ட பைஸர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 16 – 25 வயதிற்குட்பட்டோருக்கு 30 மைக்ரோகிராம் என்ற அடிப்படையில் பைஸர் தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் அவர்களுடைய உடலில் விருத்தியடைந்த நோயெதிர்ப்புசக்தியுடன் ஒப்பிடுகையில், 5 – 11 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் உடலில் மிகவும் சாதகமான மட்டத்தில் நோயெதிர்ப்புசக்தி விருத்தியடைந்திருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே பைஸர் தடுப்பூசியின் செயற்திறன் தொடர்பில் 5 – 11 வயதிற்குட்பட்ட சிறுவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் முதலாவதாக வெளியான இந்த முடிவுகள் நேர்மறையானவையாக அமைந்துள்ளன.
‘உலகளாவிய ரீதியில் கடந்த 9 மாதங்களில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மில்லியன்கணக்கான மக்கள் பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள். எனவே திரிபடைந்த டெல்டா வைரஸின் பரவலையும், அது சிறுவர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களையும் கருத்திற்கொண்டு பைஸர் தடுப்பூசியினால் பாதுகாப்புப்பெறக்கூடிய இளம் வயதினரின் தொகையை மேலும் விஸ்தரிப்பதற்கு விரும்பினோம். அமெரிக்காவில் கடந்த ஜுலை மாதத்திலிருந்து கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை பெருமளவினால் அதிகரித்தது. இது தடுப்பூசியின் தேவையை உணர்த்தியது. எனவே பைஸர் தடுப்பூசியை 5 – 11 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குப் பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தைக்கோருவதற்கு இந்த ஆய்வுமுடிவுகள் ஓர் வலுவான அடித்தளமாக அமையும்’ என்று இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள பைஸர் நிறுவனத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அல்பேர்ட் போர்லா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேற்படி ஆய்வின்போது 5 – 11 வயதிற்குட்பட்ட 2,268 சிறுவர்களுக்கு இரண்டுகட்ட பைஸர் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டு, அதன்மூலம் அவர்களின் உடலில் விருத்தியடையும் நோயெதிர்ப்புசக்தி தொடர்பில் பரிசீலிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

