கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா நாளை தொடக்கம்

228 0

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா நாளை (புதன்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கத்தோலிக்க திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த திருத்தலத்தில் திருவிழா முன்பு செப்டம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெற்று வந்தது. தேர்பவனி வரும் இடத்தில் மீன்களை உலர வைத்து இருந்ததால் மாதாவின் தேர் பவனி வருவதில் இடையூறு ஏற்பட்டு வந்தது.

இதனால், செப்டம்பர் மாதத்தில் நடைபெற்று வந்த திருவிழா பங்கு மக்களின் வசதிக்காக டிசம்பர் மாதத்திற்கு மாற்றி வைக்கப்பட்டது இருப்பினும் பாரம்பரியமாக நடந்து வந்த செப்டம்பர் மாத திருவிழாவை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 2 நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டு இந்த திருத்தலத்தில் தேதி படி திருவிழா நாளை(புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நாளை மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை, வழிபாடு, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. 2-ம் நாளான நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி, முதல் திருவிருந்து, மாலை 5.30 மணிக்கு தேரோடும் வீதிகளில் நற்கருணை பவனி, தொடர்ந்து அங்குள்ள வளாகத்தில் நற்கருணை ஆராதனை ஆகியவை நடக்கிறது. நற்கருணை ஆராதனை நிகழ்ச்சிக்கு பங்கு தந்தை ஆன்றணி அல்காந்தர் தலைமை தாங்குகிறார். ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை, இணை பங்கு தந்தையர்கள், பங்கு பேரவை துணைத் தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், பொருளாளர் பெனி, துணைச் செயலாளர் தினகரன் மற்றும் பங்கு மக்கள், பங்கு நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.