மைத்திரியின் ஒரே சாதனை – புகழேந்தி தங்கராஜ்

322 0

maithiriஜனவரி 8 இலங்கையின் வரலாற்றில் மறக்க இயலாத நாளாகவே ஆகிவிட்டது. அது 2015 அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த நாள். மகிந்தனின் அடிமையாகவே தன்னைக் காட்டிக்கொண்ட மைத்திரிபால சிறிசேனா ஒரே இரவில் அணிமாறி அதிபராகி 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. அன்றிலிருந்து இன்றுவரை வெல்லம் தின்பவன் ஒருவன்… விரல் சூப்புபவன் வேறொருவன் என்கிற கதையாகிவிட்டது மகிந்தனின் கதை.

தன்னைக் கதாநாயகனாகக் காட்டிக்கொள்ள ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்றுகுவித்து மகிழ்ந்தவன் மகிந்தன். ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்காமல் அந்த ரத்தவெறியை ரசித்துப் பார்த்துச் சிலிர்த்த இனம் சிங்கள இனம். தமிழனை வதைப்பவன்தானே இன்றுவரை சிங்கள இனத்தின் ஹீரோ!

இந்தியாவின் பேச்சைக் கேட்டு இனப்படுகொலைக்குத் திட்டமிட்ட மகிந்தன் ஜோசியனின் பேச்சைக் கேட்டுத் தேர்தலை முன்கூட்டியே நடத்தினான். மகிந்தன் எப்படித் தோற்றான் தமிழரை வறுத்தெடுப்பவன் தான் ஹீரோ என்கிற சிங்கள இலக்கணம் எப்படித் தவறியது – என்கிற கேள்வி 2015 ஜனவரியில் பூதாகரமாய் எழுந்தது. சிங்கள இனத்தின் மனோபாவமே மாறிவிட்டதோ – என்கிற ஐயம் கூட ஏற்பட்டது.

மகிந்தன் தோற்றதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று – தமிழினப்படுகொலையில் மகிந்தனோடு இணைந்துநின்ற சரத்பொன்சேகா மைத்திரியை ஆதரித்தது. அதன் விளைவாக சிங்கள வாக்குகள் பிரிந்தன. இன்னொன்று – மகிந்தனுக்குப் பாடம் புகட்ட ஒட்டுமொத்தத் தமிழினமும் மைத்திரியை ஆதரித்தது.

சிங்கள இனத்தின் மனோபாவம் மாறவேயில்லை. அந்த வாக்கு வங்கியை மைத்திரியும் மகிந்தனும் சமமாகப் பகிர்ந்துகொண்டனர். தமிழர் வாக்குவங்கிதான் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் மைத்திரியை வெற்றிபெற வைத்தது.

உண்மையில் சிங்கள வரலாற்றில் ஜனவரி 8ம் தேதிக்கு இருக்கிற முக்கியத்துவம் – மைத்திரி அல்ல லசந்த. 2009 ஜனவரி 8ம் தேதி கொழும்பு வீதியில் படுகொலை செய்யப்பட்டார் மூத்த பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க.

‘சொந்த நாட்டின் மக்களையே விமானத்திலிருந்து குண்டுவீசித் தாக்குகிற ஒரே நாடு எனது இலங்கைதான்’ என்று வேதனையோடு எழுதி தமிழர்களுக்கு நியாயம் கேட்டவன் லசந்த. அதற்காகவே கொல்லப்பட்டவன். அதனால்தான் லசந்தவுக்கு நீதி கேட்டான் எங்கள் முத்துக்குமார்.

முத்துக்குமாரும் லசந்தவும் ஒரே இனமில்லை. ஆனால் மானுடத்தை நேசிக்கிற குணம் இருவருக்கும் பொது. இருவரும் பத்திரிகையாளர்கள். தனது மரணத்தைத் தானே தீர்மானித்த பிறகு மரணசாசனம் எழுதியவன் முத்துக்குமார். தன்னுடைய மரணத்தை கோதபாய தீர்மானித்துவிட்டதை அறிந்தவுடன் மரணசாசனம் எழுதியவன் லசந்த. முத்துக்குமாரும் லசந்தவும் வேறு வேறல்ல!

கோதபாயவின் கூலிப்படையால் லசந்த சுட்டு வீழ்த்தப்பட்ட அதே நாளில் ஜனவரி 8ம் தேதி மகிந்த மிருகம் அடித்துவீழ்த்தப்பட்டதே…. அதுதான் வரலாறு.

அதிபர் தேர்தலில் மைத்திரியை ஆதரித்த கொழும்பு தமிழ்ச் சகோதரிகள் 2015ல் என்னிடம் சொன்னது இப்போதும் நினைவிருக்கிறது. ‘அண்ணா! மைத்திரி மட்டும் அதிபராகட்டும்…. மகிந்தனைக் கூண்டில் அடைத்துவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார்’ என்றார்கள் நம்பிக்கையுடன்!

நடந்த இனப்படுகொலையைப் ‘போர்க்குற்றம்’ என்றெல்லாம் பூசி மெழுகினாலும் அதற்காகவாவது மகிந்தன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – என்கிற நம்பிக்கை அந்தச் சகோதரிகளுக்கு மட்டுமல்ல தமிழர் தாயகத்திலுள்ள தமிழ் உறவுகளுக்கும் இருந்தது. அந்த நம்பிக்கையில்தான் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறார் மைத்திரிபாலா. குற்றவாளிக் கூண்டில் மகிந்தனை நிறுத்தக்கூட முயலவில்லை அவர்.

தமிழர்கள் ஆதரவுடன் மகிந்தனைக் கவிழ்த்த கையோடு ‘மின்சார நாற்காலியிலிருந்து மகிந்தனை நாங்கள்தான் காப்பாற்றினோம்’ என்று ரணில் சொல்ல மைத்திரி அதை வழிமொழிந்தார். அப்போதுதான் பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை புரிந்தது தமிழர்களுக்கு!

மைத்திரியும் ரணிலும் தமிழர்களுக்குச் செய்திருப்பது துரோகம் – என்பதில் சந்தேகமேயில்லை. மகிந்தன் நேரடியாகவே கழுத்தறுத்தான் இவர்கள் நம்பவைத்து அறுத்திருக்கிறார்கள். இதுதான் வித்தியாசம். ஆனால் சிங்கள அகராதியில் இதற்குப் பெயர் ‘துரோகம்’ இல்லை…. ‘ராஜதந்திரம்’!

ரணில் மைத்திரி போன்ற சிங்கள அரசியல்வாதிகளின் இந்த நிலைதான் – யதார்த்தம். அவர்களைப் பதவியில் அமர்த்தத் தமிழர்களால் முடியலாம். ஆனால் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் ராஜபக்சவையோ கோதபாயவையோ அவர்கள் காப்பாற்றியாக வேண்டும்.

இந்த இரண்டாண்டில் மைத்திரிபாலாவின் ஒரே சாதனை மகிந்தனைக் காப்பாற்றியதன் மூலம் பதவியைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது மட்டும்தான்! வேறெதற்காக அவர் பதவிக்கு வந்தாரென்று நினைக்கிறீர்கள்?

முதல்நாள் இரவு மகிந்தனுடன் உட்கார்ந்து அப்பம் சாப்பிட்டுவிட்டு மறுநாளே அவனுக்குக் குழிபறித்த ஒரு மனிதரிடம் நேர்மையான அணுகுமுறையை எதிர்பார்த்தது நம்முடைய அறியாமை. மைத்திரி அம்பலமாகும்போது நம்முடைய அறியாமையும் சேர்ந்தே அம்பலமாகியிருக்கிறது.

இனப்படுகொலை தொடர்பாகவோ போர்க்குற்றம் தொடர்பாகவோ இலங்கை தன்னைத்தானே விசாரித்துக் கொள்ள வாய்ப்பேயில்லை. அப்படியெல்லாம் விசாரித்தால் அதற்கு உத்தரவிடுபவர்கள் அடுத்த 24 மணி நேரம்கூட ஆட்சியில் நீடிக்க முடியாது.

எவன் தமிழின அழிப்பில் முன்னணியில் இருக்கிறானோ அவன்தான் உண்மையான தேசபக்தன் என்று நம்புகிறது சிங்கள இனம். மற்றவர்களைக் காட்டிலும் வேகமாகத் தமிழர்களைக் கொன்று குவிக்கிறவன் எவனோ அவன்தான் மிக அதிக தேசபக்தன் அவர்களுக்கு! அவன்மீது நடவடிக்கை எடுக்கத் துணிகிற எவனும் தேசத் துரோகி. எப்படித் துணிவார் மைத்திரி?

கட்சி அரசியலைக் கணக்கிலெடுக்காமல் பார்த்தால் இன்றைய சூழலில் சிங்களத்தரப்பு இரண்டே அணியாகப் பிரிந்து நிற்கிறது. ஒன்று – மைத்திரி தலைமையிலான ஆளும் கூட்டணி. இன்னொன்று – மகிந்த தலைமையிலான கூட்டு எதிரணி. இனப்படுகொலையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் இரண்டு அணியிலும் உள்ளனர். அதனால் எதிர்த் தரப்பு மட்டுமின்றி ஆளும் தரப்பும் அதற்கான விசாரணையை வலியுறுத்தப் போவதில்லை.

இனப்படுகொலைக்கோ போர்க்குற்றத்துக்கோ சர்வதேசப் பங்களிப்புடன் கூடிய விசாரணை அவசியம் என்று வலியுறுத்த வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்குத் தான் கூடுதல். கடந்த 2 ஆண்டுகளில் மைத்திரி என்ன செய்தார் என்பதைக் காட்டிலும் இவர்கள் என்ன செய்தார்கள் என்கிற கேள்வியே முக்கியம்!

இனப்படுகொலை என்று சொல்லாதே – என்று எச்சரித்ததில் ஆரம்பித்து ‘குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்த போர்க்குற்றம் என்கிற வார்த்தையே போதும்’ என்று போதித்தவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? மீண்டும் இலங்கைக்கு வாய்தா வாங்கிக் கொடுக்க இவர்கள் முயல்வதாகச் சொல்லப்படுகிறதே உண்மையா?

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பணி போர்க்குற்ற விசாரணையால் பாதிக்கப்படக் கூடாது…
அப்படிப் பாதிக்குமென்று கருதினால் சிங்கள அரசு அதை காலதாமதமில்லாமல் தெரியப்படுத்த வேண்டும்….
இப்படியெல்லாம் நச்சுப் பழத்துக்குத் தங்க முலாம் பூசுகிற வேலையில் சொந்தச் சகோதரர்களே இறங்குவது பச்சைத் துரோகமா இல்லையா!

சரி…. சிங்கள அரசு அப்படித் தெரிவித்துவிட்டால் இவர்கள் என்ன செய்வார்கள்? சர்வதேசப் பங்களிப்புடன் கூடிய போர்க்குற்ற விசாரணையை நல்லிணக்கத்தின் பெயரால் இழுத்தடிக்க இலங்கைக்குத் துணை நிற்கப் போகிறார்களா?

ஈழத்தில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகாவது நியாயம் கிடைக்க வேண்டும் – என்று மனப்பூர்வமாக நினைக்கிற நாடுகள் நிச்சயம் இருக்கும். இந்த முறையாவது அதைச் சாதித்துவிடவேண்டும் – என்கிற ஓர்மத்துடன் ஜெனிவாவுக்கு வருகிற அந்த நாடுகள் தமிழர் தரப்பிலிருந்தே அதற்கு எதிரான ‘லாபி’ நடப்பதைப் பார்த்தால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

இந்த ஆண்டாவது நியாயம் கிடைக்கும் குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தப்படுவார்கள் என்கிற நம்பிக்கை ஒவ்வோராண்டும் நசுக்கப்படுகிறது. இந்த ஆண்டும் அது நசுக்கப்பட்டால் அடுத்த ஆண்டும்…. அதற்கடுத்த ஆண்டும்… அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளும் குற்றவாளிகள் மீதான விசாரணை தள்ளிப் போடப்பட்டுக் கொண்டே வரலாம்.

சிங்களத் தரப்பு மட்டும் அவகாசம் கேட்டால் அது கேள்விக்குள்ளாக்கப்படும். அதனால் தமிழினத்துக்குள் இருக்கும் துரோகிகளோடு கூட்டு சேர்ந்து கும்மியடிக்கவே இலங்கை விரும்புகிறது. ‘பாதிக்கப்பட்டவர்களே சொல்கிறார்கள்’ என்கிற வர்ணம் வேறெப்படிக் கிடைக்கும்?

செத்துத் தொலைத்தவர்களுக்கு என்ன நீதியும் நியாயமும்…. இருக்கிறவர்களைப் பார்ப்போம் – என்கிற மனநிலைக்குத் தமிழ்த் தலைவர்கள் வந்துவிட்டார்களா? முள்ளிவாய்க்கால் என்றொரு பகுதியே வன்னிமண்ணில் இல்லையென்று சாதிக்கப் போகிறார்களா?

காலங்கடத்துவது…. மேலும் மேலும் வாய்தா கேட்பது….. சாட்சியங்களையும் தடயங்களையும் நீர்த்துப் போகவைப்பது…. இதெல்லாம் காலங்காலமாகக் குற்றவாளிகளின் சட்டத்தரணிகள் செய்கிற வேலை. இதைத்தான் இலங்கை செய்கிறது கடந்த பல ஆண்டுகளாய்! அவர்களுக்கு வக்காலத்து வாங்குகிற வேலை தமிழர்களுக்கு எதற்கு?

ஒன்றரை லட்சம் உறவுகள் கொல்லப்பட்டு பல்லாயிரம் சகோதரிகள் சீரழிக்கப்பட்டு ஏழாண்டுகள் ஆகிவிட்டது. சர்வதேச விசாரணைக்கான வாய்ப்புகளை இழுத்தடிப்பதன் மூலமும் ‘இலங்கையை இலங்கையே விசாரித்துக் கொள்ளும்’ என்கிற அபத்தமான வாதத்தை மீண்டும் மீண்டும் முன்வைப்பதன் மூலமும் கொன்றுகுவித்த ராணுவ மிருகங்களையும் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ராணுவப் பொறுக்கிகளையும் காப்பாற்றுவதென்பது இலங்கையின் திட்டம். இதை முறியடிப்பதற்காக அல்லாமல் வேறெதற்காக பதவியில் இருக்கிறார்கள் தமிழ்த் தலைவர்கள்!

ஏழு ஆண்டுகள் பொறுத்துவிட்டோம்…. இனி பொறுப்பதற்கில்லை…
இந்தமுறையும் ‘நல்லிணக்கம்’ என்கிற பெயரில் குற்றவாளிகளுக்கு வாய்தா வாங்கப் பார்க்கிறது இலங்கை அரசு….
இதை நாங்கள் அனுமதிக்க முடியாது….
சென்ற ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சர்வதேசப் பங்களிப்புடன் கூடிய விசாரணை நாளையே தொடங்கவேண்டும்…
இல்லையேல் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையமும் சேர்ந்தே நாடகமாடுகிறதோ என்கிற ஐயம் நிச்சயமாக எழும்….
என்று தமிழர் தரப்பால் அழுத்தந் திருத்தமாகப் பேச முடியாதா?

தமிழ் மக்களின் தலைவர்கள் கறாராகப் பேச இதுதான் கடைசி வாய்ப்பு. இரண்டில் ஒன்றை அவர்கள் செய்யலாம். ஒன்று – ‘சர்வதேச விசாரணை உடனே தேவை’ என்று வலியுறுத்தலாம்…..! இல்லையேல் கொலை மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட ராணுவத்தினரை காணொளி ஆதாரங்கள் மூலம் தேடிக் கண்டுபிடித்து இலங்கையின் இறையாண்மையைக் காப்பாற்றியதற்காக அவர்களுக்கு விருது கொடுக்கலாம். அப்படியுமில்லை இப்படியுமில்லை என்று நடுவாந்தரமாக நின்று கொண்டிருக்கக் கூடாது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதும் நல்லிணக்கமும் ஒன்றல்ல! ‘குற்றவாளிகள் தண்டிக்கப்படாமலேயே இருப்பது சமூகங்களுக்குள் மேலதிக பிளவை ஏற்படுத்தும்…. புதிய முரண்களை ஏற்படுத்தும்’ என்று சென்ற ஆண்டு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசெய்ன் எச்சரித்ததிலிருந்து உருப்படியான நல்லிணக்கம் உருவாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது அவசியம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

சென்ற ஜனவரி 8 மாதிரியே இந்த ஆண்டும் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதும் அதற்காக மகிந்தனைக் காப்பாற்றியாக வேண்டும் என்பதும் தான் மைத்திரியின் நோக்கமாகத் தெரிகிறது. குற்றவாளிகளைக் காப்பாற்றுவதிலேயே மைத்திரியும் ரணிலும் தமிழர் தரப்பும் குறியாக இருந்தால் ஒன்றுபட்ட இலங்கையை அவர்களால் கட்டிக் காப்பாற்ற முடியுமா?