தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறியவர்களுள் 5 பேருக்கு கொரோனா

23 0

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறியவர்கள் அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டபோது 05பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறியவர்களை கண்டறியும் சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கிரிசுதனின் ஆலோசனைக்கு அமைவாக கோட்டைமுனை பொதுச்சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தலைமையில் மட்டக்களப்பு பொலிஸாருடன் இணைந்து இன்று காலை முதல் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது ஊடரங்கு உத்தவவை மீறி வீதிகளில் அநாவசியமாக பயணிப்போர், ஊரடங்கு விதிமுறையினை மீறி வியாபார நிலையங்களை திறந்து வைத்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டோர் உள்ளிட்டோடை பொலிசார் மற்றும் பொதுச்சுகார பரிசோதகர்கள் பஸ்களில் ஏற்றிச்சென்று அன்ரிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தினர்.

மட்டக்களப்பு நகர் பகுதி, புகையிரத நிலைய வீதி, பார் வீதி மற்றும் கூளாவடி போன்ற பகுதிகளில் அநாவசியமாக நடமாடித்திரிந்தவர்கள் உள்ளிட்ட 70 மேற்பட்டோர் இதன்போது பொலிஸாரினால் கைது செய்து பஸ்களில் ஏற்றிச் சென்று பார் வீதியில் வைத்து அன்ரிஜன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

இதன்போது வீதிகளில் அநாவசியமான நடமாடியவர்களில் 05 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதாக கோட்டைமுனை பொதுச்சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார்.

இன்றைய தினம் பார் வீதியில் 99 பேர் அன்டிஜன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும் அதில் 17 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதாகவும் அவற்றில் ஐந்து பேர் வீதியில் அநாவசியமாக நடமாடியவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.