இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட ஆவணத்தில் உள்ள கையொப்பம் குறித்து சட்ட நடவடிக்கை

188 0

இணையத்தளத்தில் தமிழ் தேசியத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆவணத்தில் உள்ள கையொப்பம் தொடர்பாக குற்றவியல் சட்டத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று (10) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நாங்கள் ஒரு போதும் தனித்துச் செயற்பட்டது கிடையாது. நூங்கள் தனியாக ஒரு ஆவணத்தை அனுப்பவில்லை. இணையம் ஒன்று ஆவணத்தை வெளிப்படுத்தியுள்ளது. 9 பேர் கைச்சாத்திட்டதாக ஆவணம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது. தமிழ் தேசியத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற கடிதத் தலைப்பு ஒன்று போடப்பட்டுள்ளது.

அப்படியான ஒரு அமைப்பு இருப்பதாக எங்களுக்குத் தெரியாது. அப்படியான அமைப்பு எங்களால் உருவாக்கப்படவில்லை. அதில் கைச்சாத்திட்டதாக சொல்லப்படுகின்ற சிலர் நாங்கள் அவ்வாறு அனுப்பவில்லை என்று மறுப்பறிக்கைகள் வெளியிட்டுள்ளார்கள். ஆகையினால், இந்த இணையத்தில் வந்த ஆவணத்தின் உண்மைத் தன்மை எங்களுக்குத் தெரியாது. ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கையொப்பத்தை அந்தமாதிரி பயன்படுத்துவது, ஒரு மோசமான செயற்பாடு, ஒரு குற்றவியல் செயற்பாடு. ஆனால், அதன் உண்மைத் தன்மை தெரியாதவரைக்கும், அதைப் பற்றி சொல்ல முடியாது.

தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் என கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களின் பெயர்களும் உள்ளன. ஆகையினால், இது எந்தளவிற்கு உண்மையானது என்று எங்களுக்குத் தெரியாது. அதில் கையொப்பமிட்டமை தொடர்பாக பலர் தமது கையொப்பமில்லை என்றும் சொல்லியிருக்கின்றார்கள். அதன் உண்மைத் தன்மை அறியப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும்.

எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்கள் தவறாக உபயோகிக்கப்பட்டிருந்தால், அது குற்றவியல் சம்பவம். ஆதற்குத் தண்டனைகள் இருக்கின்றன. கட்சியாக எங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கின்றது. உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம்.