தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவை நிறைவுவிழா – ஆன்ஸ்பேர்க்-5.9.2021

2477 0

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவைநிறைவு விழாவின் வடமாநிலத்திற்கான விழா பீலபெல்ட் அரங்கிலே(04.09.2021) நடைபெற்றதைத் தொடர்ந்து, வடமத்திய மாநிலத்திற்கான விழா 05.09.2021அன்று காலை 10:00மணிக்கு மங்கலவிளக்கேற்றல் மற்றும் அகவணகத்தோடு தொடங்கியது. முப்பது ஆண்டுகள் ஒரு தலைமுறையைக் கடந்து செல்லும் காலமானபோதும் தொடர்ந்தும் துடிப்போடு செயலாற்றும் கழகமாகத் தமிழ்க் கல்விக் கழகம் இந்த ஆண்டும் தன்னைப் பதிவு செய்து வருகின்றமை சிறப்பாகும்.

5,10,15ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றியோருக்குப் பட்டயங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதோடு, 31ஆவது அகவை நிறைவுவிழா அரங்கிலே 20ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றியோர் தமிழ்வாரிதி, என்ற பட்டமளிப்பையும், 25ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றியோர் தமிழ்மாணி, என்ற பட்டமளிப்பையும் பெற, 30ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றியமைக்காக மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட சிறப்புப் பதக்கம் அணிவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மதிப்புளிப்புகளைப் பெறுவதற்கு வருகைதந்த ஆசான்களை அவர்கள் பணியாற்றும் தமிழாலய உறவுகள் புடைசூழ்ந்து சிறப்பாக அழைத்துவந்து அரங்கிலே இணைந்தமை அவர்களது அயராத பணிக்கான பெரும் அங்கீகாரமாகக் காட்சியளித்ததோடு, அவர்கள் இன்னும் முப்பது ஆண்டுகள் பணியாற்றுவதற்கான ஊக்கியாகவும் அமைந்தது. நீண்ட நெடும் தமிழ்ப்பணியிலே பயணித்து மதிப்பளிப்புகளைப் பெற்றோரிடம் கருத்துகளைக் கேட்டபோது, தாம் இந்த உலகில் வாழும்காலம்வரை அன்னை தமிழுக்கான அறப்பணி தொடருமென்று உரைத்தமையானது, அவர்களது உறுதிதளராத தமிழ்ப்பணியினை எடுத்தியம்புவதாக அமைந்தது. அதேவேளை இளையோருக்கு கனதியானதொரு செய்தியையும் சொல்லுவதாக அமைந்ததெனலாம்.

தமிழாலயத்திலே இணைந்தது முதல் 12ஆம் ஆண்டுவரை தமிழ்மொழியைக் கற்று நிறைவுசெய்தோருக்குச் செம்பகத்தின் வண்ணம் கொண்ட சிறப்பு ஆடை அணிவிக்கப்பட்டு அரங்கிற்கு அழைத்துவரப்பட்டுச் சிறப்பாக மதிப்பளிக்கப்பட்டனர். அவர்கள் அழைத்துவரப்பட்டபோது அவையே எழுந்து நின்று வரவேற்றமை தமிழை வரவேற்பதுபோன்று அமைந்திருந்து. மதிப்பளிப்புகளைத் தமது பெற்றோர் சகோதரர்கள் மற்றும் உறவுகளோடு அரங்கிற்குச் சென்று பெற்றுக்கொண்டனர்.

தமிழ்பணியாற்றியோர், தமிழ்கற்றோருக்கான மதிப்பளிப்புகள் மட்டுமன்றி, இவர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் பயானக வெற்றிகளைத் தமதாக்கிய தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் அரங்கை நிறைவாக்கின. 2021ஆம் ஆண்டுக்கான கலைத்திறன் போட்டியிலே மாநிலமட்டத்திலே முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய தமிழாலயங்களுக்கும், நாடுதழுவிய மட்டத்திலே முதல் முன்று நிலைகளைப் பெற்று வடமத்தியமாநிலத்திலே முதலாம் மற்றும் மூன்றாம் நிலையைப் பெற்ற தமிழாலயங்களுக்கும் சிறப்பு மதிப்பளிப்புகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். புள்ளிகளின் அடிப்படையில் தெரிவான ஏனைய தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகள் வரும் வாரங்களில் நடைபெறவுள்ள மத்தி(11.09.2021), தென்( (18.09.2021), மற்றும் தென்மேற்கு(19.09.2021) மாநிலங்களுக்கான அகவை நிறைவுவிழா அரங்குகளில் வழங்கப்படவுள்ளன.

கவிதை, உரையாற்றல், சிறப்புரை, வாழ்த்துரை விடுதலை நடனங்கள் மற்றும் விடுதலைப்பாடல்களென அரங்கைச் சிறப்பித்து நகர்ந்து செல்ல, நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற தமிழினத்தின் இலட்சியத் தாகம்மிகு பாடலுடன் எழுச்சி பொங்க நிறைவுற்றது.