மட்டக்களப்பில் மின்னியல் தகனசாலை ஒன்றை நிறுவுமாறு கோரிக்கை விடுத்து மட்டு மாநகர முதல்வருக்கு கடிதம் !

159 0

மட்டக்களப்பு மாவட்டத்தில்  கொரோனாவினால் உயிரிழ்தவர்களின் உடல்களை தகனம் செய்ய பொலன்னறுவை மாவட்டத்துக்கு பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டியுள்ளது எனவே மாவட்டத்தில் மின்னியல் தகனசாலை ஒன்றை நிறுவுமாறு கோரிக்கை விடுத்து மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாறஞ்சனி மட்டு மாநகரசபை முதல்வருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாறஞ்சனி கடந்த முதலாம் திகதி அனுப்பிவைத்துள்ள கடிதத்தில். தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல மரணங்கள் சம்பவித்துள்ளது இந்த வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்த 202  மரணங்களில் 27 உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்பட்டுள்ளது.

இச் சடலங்கள் தகனம் செய்வதற்கு மட்டக்களப்பில் இருந்து 100 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள மின்னியல் தகனசாலைக்கு தகனம் செய்ய கொண்டு செல்லவேண்டியுள்ளது.

அதேவேளை இவ்விடயம் தொடர்பாக பொலன்னறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பொது சுகாதார பரிசோதகர் ஆகியோரின் முன் அனுமதி பெறவேண்டியதுடன் மின்னியல் தகனம் மேற்கொள்வதற்காக திம்புலாகலை பிரதேச சபையிடமிருந்து அனுமதியைப் பெற்று அதன் பின்னரே குறித்த உடலத்தை தகனம்செய்ய அனுப்பவேண்டியுள்ளது.

தகனம் செய்வதற்கு சடலம் ஒன்றை அனுப்புவதற்கு சடலத்தை ஏற்றிச் செல்வதற்கு ஒரு வாகனம் அச் சடலத்தினை இறக்கி உரிய தகனச்சாலைக்கு கொண்டு சென்று கொடுப்பதற்காக வைத்தியசாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக பிரிதொரு வாகனம் அத்துடன் இரு சாரதிகள் மற்றும் 6 உதவியாளர்கள் என ஆளணிகளும் ஒழுங்கு செய்யவேண்டியுள்ளது.

தற்போது காணப்படும் இந்த தொற்று நோய் காரணமாக வைத்தியசாலையின் ஊழியர்கள் வரவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால்  உரியநேரத்துக்கு உரிய உடல்களை தகனம் செய்வதற்காக அனுப்பி வைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையின் பிரேத அறையிலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகின்றது.