சென்னையில் 70 சதவீத பள்ளி மாணவர்கள் வருகை

166 0

பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டதால் பஸ்-ரெயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் கூடுதல் பஸ்களை இயக்கி வருகின்றன.

தமிழகம் முழுவதும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறுகின்றன.

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படுகிறது. சென்னையில் அரசு, உதவி பெறும், மாநகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு சென்றனர்.

காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை பள்ளி வளாகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு இருந்தனர். சக மாணவ-மாணவிகளை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

பள்ளியில் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யும் காட்சி

தமிழகம் முழுவதும் முதல் நாளில் 70 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்திருந்தனர். சென்னையிலும் 70 சதவீத மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்ததாக முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் தெரிவித்தார்.

முதல் நாள் என்பதால் ஒருசில பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அனுப்புவதில் சுணக்கம் காட்டியிருக்கலாம். சிலர் வெளியூர் சென்றிருப்பதால் பள்ளிக்கு வராத நிலை ஏற்பட்டது. அதனால் அடுத்து வருகின்ற ஒருசில நாட்களில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டதால் பஸ்-ரெயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று முதல் அனைத்து பஸ்களும் நிரம்பி வழிந்தன. இதுவரையில் காலியாக ஓடிய பஸ்கள் நேற்று நிரம்பி காணப்பட்டன.

பயணிகள் நின்று பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் அரசு போக்குவரத்து கழகங்கள் கூடுதல் பஸ்களை இயக்கி வருகின்றன.

சென்னையில் மின்சார ரெயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாணவர்கள் இலவச பஸ் பாஸ் மூலம் பயணம் செய்தனர்.