யாழில் இராணுவம், பொலிஸார் முன்பாக ஒருவர் மீது வாள்வெட்டு

257 0

இராணுவம், பொலிஸார் முன்பாக வன்முறைக் குழு ஒன்று; ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது.


இந்தச் சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் மருதனார்மடத்தில் இடம்பெற்றுள்ளது.

இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டனர். தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்த நேற்றிரவு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் கொண்ட குழுவே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்தின் முன்பாக பழக்கடை ஒன்றை நடத்தி வரும் இளைஞர் படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்தவர் உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். குறித்த இளைஞருக்கு கழுத்து, காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, வாள்வெட்டில் படு காயமடைந்த நபர் மீது முன்னரும் ஒரு குழு தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறிய லில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே வேறொரு குழு ஒன்று குறித்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.