சர்வதேச கடற்பரப்பின் ஊடாக நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட 230 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள், தற்போது டுபாயில் தலைமறைவாகியுள்ள திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுவின் உறுப்பினரான கொஸ்கொட சுஜியினுடையது என காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரால், சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்களின் ஊடாக நாட்டின் கடற்பரப்பிற்குள் குறித்த ஹெரோயின் அனுப்பப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த ஹெரோயின் போதைப்பொருள், மாலைத்தீவு கடற்பகுதியில் வைத்து படகொன்றில் ஏற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து நேற்று முன்தினம் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், நாட்டிற்குள் கடத்தி வருவதற்கு முற்பட்ட 290 கிலோகிராமுக்கும் அதிக குறித்த ஹெரோயின் தொகையுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள், பலப்பிட்டிய, ஹபராதுவ, அங்ஹுன்கல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 37 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

