கிளிநொச்சியில் முன்னாள் போராளிகள் தமக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரி போராட்டம் (காணொளி)

396 0

kiliகிளிநொச்சி இரணைமடு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் தமக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் முன்னாள் போராளிகள், தாங்கள் புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்த காலம் முதல் நிரந்தர தொழில்கள் ஏதுமின்றி பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் வாழ்ந்து வருவதாகவும், புனர்வாழ்வு பெற்ற காலத்தில் தங்களுக்கு பண்ணை பயிற்சியே வழங்கப்பட்டது என்றும், எனவே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பில் சிவில் பாதுகாப்புத் திணைக்கள கிளிநொச்சி கட்டளை அதிகாரி மேஜர் சாகர வீரசிங்க கருத்து தெரிவித்த போது,

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு புதிதாக ஆட்கள் எடுப்பதாக வெளியான தவறான தகவலை அடிப்படையாக கொண்டு நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகள் ஒன்று கூடியுள்ளனர்.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைப் பொறுத்தவரை தற்போதைக்கு புதிதாக ஆட்கள் எவரையும் உள்வாங்கும் நிலையில் இல்லை. இந்த முன்னாள் போராளிகளை பார்க்கின்றபோது கவலையாக இருக்கிறன்றது.
இந்த விடயத்தில் எங்களால் எதுவும் செய்ய முடியாது. இது கொழும்பு மட்டத்தில் உயரதிகாரிகளால் தீர்மானிக்கப்படுகின்ற விடயம்.எனவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து அங்கிருந்து வெளியேறிய முன்னாள் போராளிகள் இரணைமடுச் சந்தியில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் வேலைவாய்ப்பு கோரி கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றிலும் ஈடுபட்டனர்.
இதன்போது சில பெண் முன்னாள் போராளிகள் குழந்தைகளுடன் வேலைவாய்ப்பு கோரி காத்திருந்தபோது பரிதாபமான சம்பவங்களும் இடம்பெற்றன.

இதேவேளை 170 பேர் கையொப்பம் இட்டு வேலைவாய்ப்பு கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை, கிளிநொச்சி அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளித்துள்ளனர். அத்துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான மகஜரை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் கையளிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளனர்.