எடப்பாடி பழனிசாமி உண்மையை மூடி மறைக்க முயல்வதா?- கே.எஸ்.அழகிரி

167 0

பேரிழப்பிற்கு காரணமான அ.தி.மு.க. உண்மையை மூடிமறைக்கிற வகையில் கருத்துகள் கூறுவதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் 2015-ம் ஆண்டில் சென்னையில் கனமழை பெய்த போது, செம்பரம்பாக்கம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதா? அல்லது உபரிநீர் வெளியேற்றப்பட்டதா? என சட்டப்பேரவையில் கடுமையான விவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் உண்மையை மூடிமறைக்க முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

ஆனால், உண்மைகளை எவராலும் மூடிமறைக்க முடியாது. இந்தப் பின்னணியில் 2015 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு யார் பொறுப்பு என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டிய நோக்கத்தில் நடந்தவற்றை கூறினால் தான் உண்மைகள் வெளிவரும்.

தமிழக அரசிடம் நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் நவம்பர் 17-ந்தேதி 18,000 கனஅடி நீரும், டிசம்பர் 2-ந் தேதி 29,000 கனஅடி நீரும் திடீரென முன்னறிவிப்பு இல்லாமல் இரவு நேரங்களில் திறந்துவிடப்பட்டது. இதனால் ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்த 600க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதற்கும், உடமைகளை இழப்பதற்கும் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா தான் பொறுப்பு என்று அன்றைக்கு குற்றச்சாட்டு கூறப்பட்டது.

திடீரென அதிகளவில் தண்ணீரை திறந்ததால் மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவார்கள் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் அன்றைய ஆட்சியாளர்கள் செயல்பட்டார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. பொறுப்பற்ற முறையில் நிர்வாக கோளாறு காரணமாக வெள்ளத்தினால் நூற்றுக்கணக்கான உயிரிழப்பு ஏற்பட்டதற்கு அன்றைய அ.தி.மு.க. ஆட்சிதான் பொறுப்பாகும்.

பேரிழப்பிற்கு காரணமான அ.தி.மு.க. உண்மையை மூடிமறைக்கிற வகையில் கருத்துகள் கூறுவதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழகத்தில் இத்தகைய பேரழிவு ஏற்படுவதற்கு அ.தி.மு.க. ஆட்சி தான் பொறுப்பாகும் என்பதை வலியுறுத்தி, உறுதிபடுத்தி நினைவுபடுத்த வேண்டிய காரணத்தினால் இதை மீண்டும் தெளிவுபடுத்துகிறோம்.

இனி, வருங்காலங்களில் இத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க 2015 வெள்ளப்பெருக்கை ஒரு படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசு நிச்சயம் மேற்கொள்ளும் என்று உறுதியாக நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.