மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள அவசர கோரிக்கை

162 0

மன்னார் மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் திருப்பலிகளை நடத்தாது இருக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்  ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் கோவிட்தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு மற்றும் சுகாதார துறையினர் இறுக்கமாக சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்தி உள்ளனர். அதற்கமைவாக மதஸ்தலங்களில் எவ்வித கூட்டு பிரார்த்தனைகளையும் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் திருப்பலிகளை மேற்கொள்ள தடை விதிக்குமாறு கோரி மன்னார் மறைமாவட்ட ஆயரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள நிலையில், திருப்பலிகள் மற்றும் வழிபாடுகள் அனைத்தையும் நிறுத்த ஆயர் பங்கு தந்தையருக்கு அறிவித்துள்ளார்.

மேலும் இந்து மற்றும் இஸ்லாமிய மதஸ்தலங்களிலும் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.

அனைவரது பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் பட்சத்தில் மன்னார் மாவட்டத்தினை கோவிட் தொற்றில் இருந்து முழுமையாக பாதுகாத்துக்கொள்ள முடியும். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.