அரசியலமைப்பைத் தயாரிக்கும் நடைமுறை இனியும் தாமதிக்கப்படலாகாது என்கிறார் சம்பந்தன்

205 0

அரசியலமைப்பைத் தயாரிக்கும் நடைமுறை இனியும் தாமதிக்கப்படலாகாது என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், ‘ஜூன் 16ஆம் திகதி மாலை 4 மணிக்கு, ஜனாதிபதி செயலகத்தில் தாங்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சந்திப்பதாக ஜுன் 07ஆம் திகதியன்று, கடிதம் மூலம் தனக்கு அறிவிக்கப்பட்டது.

அச்சந்திப்பு  ஒத்திவைகக்கப்பட்டதாகவும் அச்சந்திப்புக்கு, விரைவில் பிறிதொரு திகதி  வழங்கப்படுமெனவும் தனக்கு  15ஆம் திகதி மாலை தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மறுநாள் 16ஆம் திகதி காலையில், மேலுமொரு தொலைபேசி அழைப்பின் மூலமாக உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர். இந்தச் சந்திப்பை விரைவாக நடத்துவதற்கான திகதி மீள நிர்ணயிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட இரண்டு கடிதங்கள் எனக்குக் கிடைக்கப்பெற்றன.

அதற்கு மேல் தனக்கு எவ்வித தொடர்பாடல்களும் கிடைக்கவில்லை. தாங்கள் விரும்புகின்றபோது உங்களை தாங்கள் சந்திப்போம் என்பதை தங்களுக்கு இத்தால் அறியத் தருகிறேன்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது நாடு சுதந்திரத்திலிருந்து பின்வரும் மூன்று அரசியலமைப்புக்களைக் கொண்டிருந்ததென்பதை தான் இங்கு குறிப்பிட்டு, அவற்றை சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

1). ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கத்தால்  அவர்களுடைய சொந்த அரசியலமைப்பு வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சுதந்திரத்துக்கு முன்னர், தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு.

இது, தற்போது பெருமளவு மாற்றமடைந்துள்ளது. ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகியவற்றிற்கு விரிவான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அதனையே தமிழ் மக்களும் ஓர் ஐக்கிய பிரிபடாத இலங்கைக்குள் தமது வரலாற்று ரீதியான வாழ்விடப் பிரதேசங்களில் கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக தமது ஜனநாயக தீர்ப்புகளின் மூலம் கோரி வருகின்றனர்.

2). தமிழ் மக்கள் 1972ஆம் ஆண்டின் அரசியலமைப்பு தயாரிப்புக்கு பங்களிப்புச் செய்யவில்லை.

3). தமிழ் மக்கள் 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு தயாரிப்புக்கு பங்களிப்புச் செய்யவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

1994ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வெரு தேசிய தேர்தலிலும் இறைமை கொண்ட மக்களால் 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளபோதிலும்,  1978ஆம் ஆண்டிலிருந்து நாம் அவ் அரசியலமைப்பின் கீழேயே ஆளப்பட்டு வருகிறோம் எனவும், சம்பந்தன் தெரிவித்தார்.

இவ்வாறு, மக்களது விருப்பத்தையோ  சம்மதத்தையோ பெற்றிராத ஓர் அரசியலமைப்பின் கீழ் நாம் ஆளப்படுகிறோமெனவும், அவர் கூறினார்.

மேல் குறிப்பிடப்பட்டவை இலங்கை  இணங்கி ஏற்றுக்கொண்டுள்ள  சர்வதேச  சமவாயங்களினதும்; ஆவணங்களினதும்  மீறல்களாக அமைகின்றன எனவும், சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

‘எனவே, அரசியலமைப்பைத் தயாரிக்கும் நடைமுறை இனியும் தாமதிக்கப்படலாகாது. 1972ஆம் ஆண்டு அரசியலமைப்பும் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு முறையே 2 வருடங்களுக்கும் ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தையே எடுத்தன.  தற்போதைய நடைமுறை கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக  நடைபெற்று வருகிறது.

‘இந்நடைமுறை இனியும் தாமதிக்கப்படாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு  நான் தங்களை வினயமாகக் கேட்டுக்கொள்கிறேன்’ எனவும், அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் பிரதி பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.