கொரோனா சிகிச்சைக்கு செல்ல மறுத்த ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக வழக்கு!

162 0

கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு செல்ல மறுத்த வவுனியாவின் பிரபல ஹோட்டல் உரிமையாளர் ஒருவருக்கு எதிராக சுகாதாரப் பிரிவினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, சின்னப்புதுக்குளம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வரும் அதன் உரிமையாளர் (வயது 59) ஒருவருக்கு கடந்த 11 ஆம் திகதி கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்ல முற்பட்ட போது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உயர்மட்ட அழுத்தம் காரணமாக வவுனியாவில் 12 கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியாகிய நிலையில் மறுநாள் சுகாதார திணைக்களத்தை சேர்ந்த வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் குறித்த நபரை கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்த போது தொற்றில் உள்ளவர்களை வீட்டில் வைத்து சிகிச்சை செய்ய முடியும் என்ற சுற்று நிருபத்தை காட்டி அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

இதன்போது மருத்துவர்கள் அவரை வீட்டில் வைத்து சிகிச்சையளிப்பதற்கான சுற்று நிருபத்திற்கு அமைவாக அவரது உடல் நிலை உள்ளதா என பரிசோதித்த போது குறித்த தொற்றாளருக்கு சுகர் 9.8 மில்லிகிராமாக காணப்பட்டதுடன், உடலில் ஒட்சிசனின் அளவும் குறைவாக இருந்துள்ளது. அத்துடன் நெஞ்சுப் பகுதியில் சத்திர சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சுற்று நிருபத்திற்கு அமைவாக இவ்வாறான நபரை வீட்டில் வைத்து சிகிச்சையளிக்க முடியாது. இதனால் தொற்றாளருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் எனக் கருதிய சுகாதார பிரிவினர் அவரை சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்ல முயசித்தனர். அவர் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

அத்துடன், தன்னை சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்ல சுகாதாரப் பிரிவினர் மிரட்டியதாக ஒன்லைன் மூலம் வவுனியா பொலிசில் தொற்றாளர் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாடு தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரிகள் பொலிசாருக்கு விளமளித்திருந்ததுடன், தமது கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சுகாதார வைத்திய அதிகாரிகளால் குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் நீதிமன்றில் குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

வவுனியாவில் கொவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுகாதார பிரிவினரின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்காது சமூக பொறுப்புள்ள ஒருவர் செயற்பட்டமை குறித்து பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், வட மாகாணத்தில் வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கும் நடைமுறை 15 ஆம் திகதி முதலே நடைமுறைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.