தமிழகத்தை 5 ஆண்டுகளில் பசுமை மாநிலமாக மாற்றுவோம்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி

151 0

கொரோனா காலத்தில் பொது மக்கள் நலன் கருதி 48 ஆயிரம் வாகனங்களில் காய்கறிகளை விற்பனை செய்ததாக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் குறித்து கூறியதாவது:-

வேளாண் பட்ஜெட்டை உருவாக்கும் முன்பு 18 மாவட்ட மக்களிடம் கருத்துகளை கேட்டோம். வாழை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வது பற்றிய திட்டங்களையும் உருவாக்கி உள்ளோம். இதன் மூலம் இளைஞர்கள், தொழில் முனைவோர்களாக மாறுவார்கள்.

குமரி மாவட்டத்தில் மட்டி வாழைக்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், தரிசு நில மேம்பாட்டுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய வேளாண் திட்டங்களால் 5 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள். 5 ஆண்டுகளில் தமிழகத்தை பசுமை நிறைந்த மாநிலமாக மாற்றி காட்டுவோம்.
கொரோனா காலத்தில் பொது மக்கள் நலன் கருதி 48 ஆயிரம் வாகனங்களில் காய்கறிகளை விற்பனை செய்தோம். தமிழக அரசின் இந்த திட்டத்தை பொது மக்கள் பலர் இப்போதும் செயல்படுத்தி வருகிறார்கள்.
கோப்புப்படம்

சிறிய வாகனத்தில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு கணவன்- மனைவி இருவரும் சென்று வியாபாரம் செய்வதை பார்க்க முடிகிறது.

இப்போது பாரம்பரிய நெல்களை தேர்வு செய்து அந்த அரிசியை வாங்கி சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள்.

கருப்பு கவுனி நிறம் கருப்பு, மாப்பிள்ளை சம்பா நிறம் சிவப்பு, தி.மு.க. நிறமும் கருப்பு- சிவப்பு.

இவ்வாறு எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசினார்.

அவர் பேசும் போது பல்வேறு கருத்துகளை கிராமத்து பாணியில் கூறினார். அதை கேட்டு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் சிரித்தபடியே ரசித்தனர்.