ஈழத் தமிழர்களுக்கான வெளிவிவகாரக் கொள்கை சாத்தியமான ஒன்றா ?

296 0

ஈழத் தமிழர்களுக்கான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றின் தேவை தொடர்பில் பேசப்படுகின்றது. பொதுவாகவே நமது சூழலில் விடயங்கள் பேசப்படும் அளவிற்கு, அந்த விடயங்கள் ஆழமாக நோக்கப்படுவதில்லை. அதாவது, நாம் முன்வைக்கும் விடயங்களை எவ்வாறு சாத்தியப்படுத்தலாம், உண்மையிலேயே அதனை சாத்தியப்படுத்த முடியுமா? முடியுமென்றால் எவ்வாறு? இப்படியான கேள்விகளுக்குள் எவரும் செல்வதில்லை. ஒரு நுனிப்புல் மேய்ச்சலாகவே அனைத்தும் முடிந்துவிடுகின்றன. இதன் காரணமாகவே பெரும்பாலான விடயங்கள், சாதாரணமாக வாசித்துவிட்டு சாதாரணமாக கடந்து செல்லப்படுகின்றது. சாதாரணமாக எழுதிவிட்டுப் போதல் – என்னும் நிலைமை இருக்கின்ற போது, சாதாரணமாக வாசித்துவிட்டு செல்லும் போக்கை நாம் எவ்வாறு குறை கூற கூறமுடியும்?

அடிப்படையில் வெளிவிவகாரக் கொள்கை என்பது நாடுகளுடன் தொடர்பானது. அரசியல் கட்சிகள், குழுக்கள், இயக்கங்கள் தொடர்பானதல்ல. ஒரு நாடு (அரசு) தனது நலன்களை பாதுகாப்பதற்காக ஏனைய நாடுகளுடன் உறவாடுவதற்கான ஒரு வழிகாட்டியே வெளிவிவகாரக் கொள்கை எனப்படும். வெளிவிவகாரம் – என்பதிலிருந்தே இது வெளியிலிருப்பவர்கள் தொடர்பானது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். இதனை கதவுகளுக்கு வெளியில் என்றும் கூறுவதுண்டு. ஒரு வெளிவிவகாரக் கொள்கை இல்லாத நாட்டை ஆழ்கடலில் திசை தெரியாது நிற்கும் ஒரு கப்பலுடன் ஒப்பிடுவார்கள். ஒரு நாட்டிற்கு உறுதியான வெளிவிவகாரக் கொள்கை அவசியம். ஒரு நாடு வைத்திருக்கும் வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்தான் ராஜதந்திரம் எனப்படும். ராஜதந்திரம் என்பது, ஒரு நாடு, அதன் வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படையில் முன்நோக்கி பயணிப்பதற்கான அறிவும் செயலுமாகும். ஆனால் ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கை என்பது திடிரென்று உருவாகி வளர்ச்சிபெறும் ஒன்றல்ல. நாடுகளின் வெளிவிவகாரக் கொள்கை, அந்த நாட்டின் நீண்டகால வரலாற்றுடன் தொடர்புடையதாகும். உலக அரசியல் சூழலுக்கு ஏற்ப இதில் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டாலும் அந்த மாற்றங்களின் அடிப்படை ஒன்றுதான். அதவாது, நாடுகளின் நலன்.

இந்த பின்புலத்தில் நாம் சில அடிப்படையான கேள்விகளை எங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். ஈழத் தமிழர் அரசியலுக்கு கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. இந்த காலகட்டத்தில் ஈழத் தமிழர்கள் மத்தியில் ஒரு வெளிவிவகாரக் கொள்கை பாரம்பரியம் இருந்திருக்கின்றதா? விடுதலைப் புலிகள் இயக்கம் கிளிநொச்சியை தலை நகராகக் கொண்டு, ஒரு நடைமுறை அரசாங்கத்தை நிர்வகித்து வந்த காலத்தில், அவர்களிடம் ஒரு வெளிவிவகாரக் கொள்கை இருந்ததா? அப்படி இருந்தது என்றால் அந்த வெளிவிவகாரக் கொள்கை என்ன? இன்று வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் விவாதிக்க முற்படுவர்கள் எவருமே இந்த அடிப்படையான கேள்விகளிலிருந்து விடயங்களை நோக்கவில்லை. இது ஒரு தவாறாகும்.

1949இல் இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்டது. 1949 இலிருந்து, 1976 வரையான காலத்தின், தமிழர் அரசியலுக்கு எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலையேற்றிருந்தார். தமிழ்த் தேசிய எழுச்சியை பொறுத்தவரையில் செல்வநாயகத்தின் காலப்பகுதி முதல் பாகம் என்றால் பிரபாகரனின் காலப்பகுதி இரண்டாம் பாகமாகும். செல்வநாயத்திடம் வெளிவிவகாரக் கொள்கை சார்ந்த பார்வை இருந்ததா? ஆகக் குறைந்தது புவிசார் அரசியல் தொடர்பான புரிதலாவது இருந்ததா?

1956இல் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க 1957இல், பிரித்தானியாவின் திருகோணமலை கடற்படை தளத்தையும் கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தையும் அகற்றுமாறு கோரினார். அதனடிப்படையில் குறித்த தளங்களை பிரித்தானியா அகற்றியது. பண்டாரநாயக்கவை பொறுத்தவரையில் இது ஒரு மிக முக்கியமான வெளிவிவகார வெற்றியாகும். இந்தக் காலத்தில், இந்திய பிரதமரான ஜவகர்லால் நேரு, ஆசியாவிலிருக்கும் பிரித்தானிய படைத் தளங்களை அகற்ற வேண்டும் என்னும் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார். இதற்கு ஆதரவாகவே பண்டாரநாயக்க இலங்கையிலிருந்து பிரித்தானிய படைத்தளங்களை அகற்றினார். தமிழ் மக்களின் தலைவரான செல்வநாயகம் பண்டாரநாயக்கவின் செயற்பாட்டை விமர்சித்ததுடன் அதனை எதிர்க்கவும் செய்தார். பண்டாரநாயக்க தனது அணிசாரா கொள்கையின் அடிப்படையிலேயே பிரித்தானியாவின் தளங்களை அகற்றினார். அப்போது இந்தியா பண்டாரநாயக்கவின் செயற்பாட்டை ஆதரித்திருந்தது. ஆனால் செல்வநாயகமோ பிரித்தானிய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தார். இந்த இடத்தில் செல்வநாயகம் மேற்கு சார்பான நிலைப்பாட்டை எடுத்திருந்தாரா? ஒரு வாதத்திற்காக அப்படியே எடுத்துக் கொண்டால், செல்வநாயகத்தின் பிரித்தானிய சார்பினால் தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன? உண்மையில் செல்வநாயகம் இந்த இடத்தில் புவிசார் அரசியல் தொடர்பில் சிந்தித்திருக்கவில்லை. அப்படி சிந்தித்திருந்தால் அவர் இந்தியாவின் நிலைப்பாட்டுடன்தான் நின்றிருக்க வேண்டும். பண்டாரநாயக்கவின் நிலைப்பாட்டை எதிர்க்க வேண்டும் என்னும் ஒரேயொரு நோக்கத்தின் அடிப்படையிலேயே செல்வநாயகம் சிந்தித்திருக்கின்றார். இது தமிழ் தலைவர்களின் புவிசார் அரசியல் புரிதலுக்கு சிறந்த உதாரணமாகும்.

spacer.png

1949 தொடக்கம் 1976 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் அரசியல் செயற்பாடுகளை ஒரு வரியில் கூறினால், இலங்கைக்குள் அதிகாரங்களை பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்று அவற்றை நாம் வரையறுக்கலாம். 1976 தனி நாட்டுக்கான வட்டுக் கோட்டை தீர்மானமும், அதனை தொடர்ந்து 1977இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலும் தமிழ்த் தேசிய அரசியல் எழுச்சியில் இரண்டாம் அத்தியாயத்தை தொடக்கிவைத்தது. இந்த இடத்தில் உண்மையிலேயே தமிழர் தலைமைகள் வெளிவிவகார அணுகுமுறை தொடர்பில் சிந்தித்திருக்க வேண்டும். ஏனெனில் 1971 இல், இந்தியாவின் தலையீட்டினால் பங்காளதேஸ் என்னும் புதிய நாடு உதயமானது. இந்த விடயம் செல்வநாயகத்தின் அதுவரையான சிந்தனைப் போக்கில் பெருமளவு செல்வாக்குச் செலுத்திருக்க வேண்டும். இதன் தொடர்சியாகத்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியை செலவநாயகம் உருவாக்கினார். பின்னர் வட்டுக் கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த இடத்திலும் கூட, தமிழ் மிதவாத தலைவர்கள் புவிசார் அரசியலை விளங்கிக் கொள்வதில் சறுக்கி விழுந்தனர்.

இந்தியாவை பொறுத்தவரையில், பாக்கிஸ்தான் ஒரு வரலாற்று எதிரியாக நோக்கப்படும் நாடு. இப்போதும் அதுதான் நிலைமை. 1965இல் இரு நாடுகளுக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து வரலாற்று பகை மேலும் கொழுந்துவிட்டு எரிந்தது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் பாக்கிஸ்தனை பலவீனப்படுத்தும் நோக்கில் கிழக்கு பாக்கிஸ்தானின் கிளர்சிக்கு இந்தியா ஆதரவளித்தது. ஆனால் இலங்கை இந்தியாவின் எதிரி நாடு அல்ல. அப்படியானதொரு பர்வை இப்போதும் இந்தியாவிடம் இல்லை. இப்படியான சூழலில், இலங்கையை இரு கூறாக்கும் போராட்டத்தை இந்தியா எந்த அடிப்படையில் தத்தெடுக்க முடியும்?

இந்தியா ஒரு தனிநாட்டை ஆதரிக்கும் என்னும் பார்வை ஆயுத இயக்கங்களின் தலைவர்கள் மத்தியில் வேருன்றி இருந்தது. ஆனால் 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து அந்த நம்பிக்கை நீர்த்துப் போனது. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும் இந்தியாவின் ஆதரவில்லாமல், அவர்களை விரோதித்துக் கொண்டு, தனிநாட்டை அடைய முடியுமென்று நம்பி போராட்டத்தை தொடர்ந்தனர். அந்த போராட்டமே 2009இல் முற்றுப்பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழர் அரசியலில் மூன்றாம் அத்தியாயம் ஆரம்பித்தது. ஆனால் இந்த மூன்றாம் அத்தியாம் நிச்சயமற்ற எதிர்காலம் ஒன்றையே தமிழர்களுக்கு முன்னால் வைத்திருக்கின்றது.

யுத்தம் நிறைவுற்று பன்னிரெண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் முன்னோக்கி பயணிப்பதற்கான தெளிவான ஒரு வரைபடம் தெரியவில்லை. இவ்வாறானதொரு நிலையில்தான் தமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கொள்கை வேண்டும் என்னும் வாதத்தை சிலர் கையிலெடுத்திருக்கின்றனர். அவ்வாறான ஒன்று இல்லாததால்தான் தமிழர்களால் முன்நோக்கி பயணிக்க முடியாமல் இருப்பதாகவும் சிலர் வாதிட முற்படுகின்றனர். தமிழர்களுக்கான வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் சிந்திப்பதோ அதனை நோக்கி உரையாடுவதோ தவறான விடயங்கள் அல்ல. உண்மையில் அது அவசியமானதுதான் ஆனால் அதனை எவ்வாறு வரையலாம் என்பது தொடர்பில் ஒரு தெளிவான பார்வையும் அதற்கான உழைப்பும் அவசியம்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கிவரும் அமெரிக்க செயற்பாட்டு குழு அவர்களது வருடாந்த மூலோபாய அமர்வில் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் பேசுமாறு என்னை அழைத்திருந்தது. அங்கு குறிப்பிட்ட விடயத்தையே இங்கு மீண்டும் வலியுறுத்துகின்றேன். ஈழத் தமிழர்களுக்கான வெளிவிவகார கொள்கை நிலைப்பாடு (நிலைப்பாடுகள்) என்பது, அவர்களது வாழ்விடம் எந்த பிராந்தியத்தில் இருக்கின்றது என்பதுடன் நேரடியாக தொடர்புபட்டிருக்கின்றது. இந்த அடிப்படையில் சிந்தித்தால், நேற்று எது யதார்த்தமாக இருந்ததோ அதுதான் இன்றும் யதார்த்தமாக இருக்கின்றது. தெற்காசிய பிராந்தியத்தை பொறுத்தவரையில் இந்தியாவே பிரதான சக்தி. இந்தியாவை தவிர்த்து ஈழத் தமிழர்களுக்கு ஒரு அரசியல் எக்காலத்திலும் இருக்கப் போவதில்லை. இந்தியாவை தவிர்க்கும் ஒரு அரசியல் தங்களுக்கு தேவையென்று ஈழத் தமிழர்கள் கருதினால், அதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. அதாவது, சிங்கள பெருந் தேசியவாதத்திற்குள் தமிழர்கள் முற்றிலும் கரைந்துபோதல்.

இந்தியாவை தவிர்க்க முடியாது என்னும் நிலையில், இந்தியாவை கருத்தில் கொண்டுதான், ஈழத் தமிழ் தலைமைகள் தங்களுக்கான வெளிவிவகார கொள்கை தொடர்பில் சிந்திக்க முடியும். வெளிவிவகார கொள்கை தொடர்பில் சிந்திக்கும் போது ஒரு அடிப்படையான விடயத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும். அதாவது, சிறிலங்காவின் வெளிவிவகார அணுகுமுறை தொடர்பிலும் ஒரு தெளிவான பார்வை அவசியம்.

சிறிலங்காவின் வெளிவிவகார அணுமுகுறை முன்னர் அணிசாரா நிலைப்பாட்டியிலேயே இருந்தது. 1977இல் பதவிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன மேற்குசார்பான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தார். இதன் விளைவாகவே இந்தியாவின் தலையீடும் நிகழ்ந்தது. தற்போதைய அரசாங்கமும் பண்டாரநாயக்கவின் நடுநிலை தத்துவத்தையே உயர்த்திப்பிடிக்க முற்படுகின்றது. பண்டாரநாயக்க தனது அணிசாரா கொள்கையை நடுநிலை தத்துவம் என்றே வர்ணித்திருந்தார். தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவும் நடுநிலை வெளிவிவகார கொள்கை தொடர்பிலேயே பேசிவருகின்றார். சிறிலங்காவின் நலன்களை முன்வைத்து அனைவருடனும் உறவில் இருப்பது. எவரையும் விரோதித்துக் கொள்வதல்ல என்பதே அவர்களது நிலைப்பாடு. அதில் அவர்களால் தொடர்ந்தும் பயணிக்க முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் நோக்க வேண்டும்.

spacer.png

சிறிலங்கா இவ்வாறானதொரு கொள்கை நிலைப்பாட்டை கொண்டு வியாபாரம் செய்ய முற்படும் போது, அதே நடுநிலை கொள்கையை வைத்து அல்லது பக்கம் சாராத கொள்கையை வைத்து ஈழத் தமிழர்களும் வியாபாரம் செய்ய முடியுமா? அப்படியான வியாபாரத்தில் தமிழர்களுக்கு இலாபம் கிடைக்குமா? இந்த அடிப்படையில் சித்தித்தால் தமிழர்களுக்கான வெளிவிவகாரக் கொள்கை என்பது (அப்படியொரு கொள்கை தேவையெனில்) இநதிய சார்பு – அமெரிக்க சார்பு (மேற்கு சார்பு) என்னும் அடிப்படையில்தான் அமைய முடியும். நடுநிலை கொள்கை அல்லது பக்கம்சாராத கொள்கை நிலைப்பாட்டை கொண்டு ஈழத் தமிழர்கள் உலகில் வியாபாரம் செய்ய முடியாது. ஏனெனில் வெளிவிவகாரக் கொள்கை என்பது அடிப்படையில் நாடுகளுக்கிடையிலான நலன்களுக்கான அரசியல் வியாபாரமாகும். நடுநிலை கொள்கை ஒன்றை ஒரு நாடு பின்பற்றலாம் ஆனால் நாடற்ற, பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டமொன்றின் தலைமை அதனை கைக்கொள்ள முடியாது. ஏனெனில் நவீன வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான உரையாடல்கள் அனைத்துமே நாடுகளை அடிப்படையாகக் கொண்டதாகும். இதில் அரசற்ற தரப்புக்களுக்கான வாய்ப்புக்கள் மிகவும் அரிது. இதனையும் தாண்டி ஈழத் தமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கொள்கை தேவை என்றால், அது நிச்சயம் இந்திய மற்றும் அமெரிக்க சார்பான அணுகுமுறையாகவே இருக்க முடியும். இருக்க வேண்டும். வியாபாரத்தில் இலாபம் பெற விரும்பினால்…
யதீந்திரா