ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டு, முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான குற்றப் பகிர்வுப் பத்திரத்தை கையளிக்க நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில் அந்நடவடிக்கைகளுக்காக குறித்த வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த விவகாரத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க விஷேட ட்ரயல் அட்பார் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று குறித்த வழக்கானது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே தலைமையிலான, மேல் நீதிமன்றின் ஆதித்ய பட்டபெதிகே மற்றும் மொஹம்மட் இஸ்ஸதீன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகிய இருவரும் மன்றில் ஆஜராகியிருந்த நிலையில் அவர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.
அத்துடன் அவர்களின் கைரேகை பதிவுகளை பெற்றுக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று நீதிமன்றில் ஆஜராகிய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், பிரதிவாதிகள் இருவருக்கும் எதிராக முன் வைக்கப்பட்டுள்ள குற்றப் பகிர்வுப் பத்திரத்தை மீள ஆராய்ந்து உறுதியான ஒரு குற்றப் பகிர்வுப் பத்திரத்தை முன் வைக்க நீதிமன்றில் அனுமதி கோரினார்.
அதற்கு அனுமதியளித்த நீதிமன்றம் வழக்கை அதற்காக எதிர்வரும் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தது.
முன்னதாக, தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல் கிடைத்திருந்த போதிலும் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் கடமையை நிறைவேற்ற தவறியதன் ஊடாக கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கள் பூஜித்த, ஹேமசிறி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே இவ்விருவருக்கும் எதிராக தனித் தனியான அவ்வழக்கு விசாரணைகளுக்கு மூவர் கொண்ட சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றை அமைக்க சட்ட மா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரியிருந்தார்.
கடந்த மே மாதம் 3 ஆம் திகதி முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர்தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய தகவல்களை காட்சிப் படுத்தும் நடவடிக்கை முதலில் கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் முன்னெடுக்கப்பட்டது.

