லாப் சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியாத நிலை

224 0
நாடுபூராகவும் லாப் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், லாப் சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

அநேகமான விற்பனை நிலையங்களில் “லாப் சமையல் எரிவாயு விற்பனைக்கு இல்லை” என எழுதப்பட்ட அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. லாப் சமையல் எரிவாயுவுக்கு கடந்த ஒருமாதமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அந்த வகை சமையல் எரிவாயுவை பயன்படுத்தும் அநேக ஹோட்டல் துறையினர் உள்ளிட்ட பலர் பாரிய
அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, எரிபொருள் கொள்வனவுக்காக வரும் நுகர்வோர் வெறுங்கையுடன் திரும்பிப் போவதாகத் தெரிவித்த விற்பனைப் பிரதிநிதியொருவர், இத்தட்டுப்பாடு சில வாரங்களில் நீங்கும் எனநம்புவதாகவும் தெரிவித்தார்.

மஞ்சள் நிற சிலிண்டருக்கு லிட்ரோ நிறுவனத்தின் நீல நிற சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென கடந்த வாரம் லிட்ரோ நிறுவனமும் நுகர்வோர் விவகார அமைச்சரும் அறிவித்த நிலையில், பல இடங்களில் லிட்ரோ விற்பனை நிறுவனங்களின் முன்பாக மஞ்சள் நில சிலிண்டர்களுடன் நுகர்வோர் காத்திருப்பதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தமக்கு உத்தியோகப்பூர்வமாக அவ்வாறானதோர் அறிவிப்புக் கிடைக்காமையால், மஞ்சளுக்குப் பதிலாக நீல சிலிண்டர்களை வழங்க முடியாதென விற்பனைப் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.