பதுக்கப்படும் நெல் அரசுடமையாக்கப்படும்

169 0

உத்தரவாத விலையை விட கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நெல்லின் விலை, அரிசியின் விலை மற்றும் வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நடை முறைப்படுத்தும் செயல் திட்டங்களை தெளிவுபடுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை கூறினார்.

நெல் சந்தைப்படுத்தல் சபை, நெல் ஆலை உரிமையாளர்கள் ஆகியோருக்குப் புறம்பாக நெல்லை சேமித்து வைக்கும் மூன்றாம் தரப்புக்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு மேலதிகமாக தேவையான சட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. விலை அதிகரிப்பை கருத்திற்கொண்டு பதுக்கி வைக்கப்படும் நெல்லை அரசுடைமையாக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதற்கான சட்டமும் தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

வாடிக்கையாளர்கள், விவசாயிகள் ஆகிய தரப்புக்களின் நலன்கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார். உத்தரவாத விலையை விட கூடுதலான விலைக்கு அரசியை விற்பனை செய்வோருக்கு எதிராக விதிக்கப்படும் தண்டப்பணம் 25 ஆயிரம் ரூபா தொடக்கம் ஒரு லட்சம் ரூபா வரை அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.