நேர்மையாக பணியாற்றி காவல் துறைக்கு பெருமை சேர்ப்பேன்: காவல் உதவி ஆய்வாளர் சிவன்யா உறுதி

177 0

நேர்மையாக பணியாற்றி காவல் துறைக்கு பெருமை சேர்ப்பேன் என தமிழக காவல் துறையில் 2-வதாக தேர்வு செய்யப்பட்ட மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் சிவன்யா தெரிவித்தார்.

சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு வந்த மூன்றாம் பாலினத்தவர்கள், தற் போது பல துறைகளில் சாதித்து வருகின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், பத்திரிகை புகைப்பட நிபுணர், அழகு கலை நிபுணர் மற்றும் தகவல் தொழில் நுட்பவியலாளர் என அவர்களது வளர்ச்சியின் ஆதிக்கம், காவல் துறையிலும் தடம் பதிக்கத் தொடங்க விட்டது. அந்த வகையில், தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கு 2-வது நபராக தேர்வு செய்யப்பட்டிருப்பவர் ‘சிவன்யா’ என்றழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பணி நியமன ஆணையை பெற்றுள்ள சிவன்யா, தி.மலை அடுத்த பாவுப்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறார். தன்னுடைய வெற்றிப் பயணம் குறித்து அவர் கூறும்போது, “எனது தந்தை செல்வவேல் 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். தாயார் வளர் மற்றும் 2 சகோதரர்களுடன் வசித்து வருகிறேன். பட்டதாரி அண்ணன் ஸ்டாலின். தம்பி தமிழ்நிதி, இதில், தமிழ்நிதி தச்சம்பட்டு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். நான், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் இளம் வணிகவியல் பட்டம் பெற்றுள்ளேன்.

காவல்துறை பணியில் சேர வேண்டும் என்பது இளம் வயதுகனவு. உடலில் ஏற்பட்ட மாற்றத்தால், மூன்றாம் பாலினத்தவராக உருவெடுத்தாலும், எனது கனவில் இருந்து பின்வாங்கவில்லை. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். திருவண்ணா மலையில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தேன். என்னுடைய இலக்கை அடைய வேண்டும் என்பது மட்டும்தான், எனது கவனம் இருந்தது. எனது முயற்சிகளுக்கு குடும்பத்தில் உள்ளவர்களும் உதவி யாக இருந்தனர். நண்பர்களும் ஆதரித்தனர். அனைவரது ஒத்துழைப்பு மற்றும் எனது குல தெய்வத்தின் ஆசியுடன், தமிழகத்தில் 2-வது காவல் உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். எனது பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலிடம் பெறும்போது, மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

டிஎஸ்பி பதவியே இலக்கு…

காவல் உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், எனது லட்சியத்தை நான் அடைய வில்லை. குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று, காவல் துணை கண் காணிப்பாளராக வர வேண்டும். அந்த நிலையை பிடித்துவிட்டால், எதிர்காலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வந்து விடுவேன். இதற்காக, கூடுதல் கவனம் செலுத்தி படித்து வருகிறேன். வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால், என்னை போன்றவர்களும் நல்ல நிலைக்கு வர முடியும். அரசுப் பணியில் 3-ம் பாலினத்தவர்கள் சேர வேண்டும். அதற்கான கட்டமைப்பை அரசாங்கமும், சமூக அமைப்புகளும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

குடும்பத்தினர் ஆதரிக்க வேண்டும்

உடலில் ஏற்படும் மாற்றத்தால், ஒருவரை அவரது குடும்பத்தினர் புறக்கணிக்கக் கூடாது. அவர்களை ஆதரித்து ஊக்கமளிக்க வேண்டும். கேலி,கிண்டல்களை புறம் தள்ளி விட்டு, நமது இலக்கை அடைவதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். என்னுடைய பணியில் நேர்மையாக பணியாற்றி, என்னை தேர்வு செய்த காவல்துறைக்கு பெருமை சேர்ப்பேன்” என்றார். தமிழக காவல்துறையில் முதல் உதவி ஆய்வாளராக பிரித்திகா யாஷினி தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.