06 மாதங்களில் கொவிட் கட்டுப்பாட்டுச் செலவு…

231 0

2021 ஜூன் மாதம் வரை தடுப்பூசி வழங்குதல் தவிர்ந்த கொவிட் 19 தொற்றுடன் தொடர்புடைய இதர செலவீனங்களுக்காக 53 பில்லியன் ரூபாய்கள் (5300 கோடி ரூபாய்கள்) செலவிடப்பட்டுள்ளதுடன், தடுப்பூசி கொள்வனவிற்காக இதுவரை 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (11 கோடி ரூபாய்கள்) வரை செலவிடப்பட்டுள்ளதாக திறைசேரி மற்றும் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.எம். ஆடிகல அவர்கள் தெரிவித்தார்.

´தொற்றுக்கு மத்தியில் பொருளாதார முகாமைத்துவம்´ எனும் தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்டே எஸ்.எம். ஆடிகல இதனை தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டின் முதல் 06 மாதங்களுடன் ஒப்பிடும் போது, 2021ம் ஆண்டின் முதல் 06 மாதங்களில் வரி வருமானம் 08 சதவீதங்களினால் அதிகரித்துள்ளது. கொவிட் 19 தொற்று நிலைமையினால் நாடு முழுவதும் முடக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன என்பதை இது வெளிகாட்டுவதாக திறைசேரியின் செயலாளர் சுட்டிக் காட்டினார்.

கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவினை எதிர்கொள்ள வேண்டின், தடுப்பூசி செலுத்தும் இலக்கினை அடைந்துக் கொள்வது மிகவும் முக்கியமானது என சுட்டிக்காட்டிய ஆடிகல, தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

தடுப்பூசி செலுத்துவதன் மூலம் இறப்பு விகிதத்தினை குறைத்துக் கொள்வதற்கு சாத்தியமாவதுடன் அது பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்கின்றது. அரசாங்கம் தற்போது பெற்றுக் கொண்டுள்ள வெளிநாட்டுக் கடன் தொகையானது முன்னைய ஆட்சிகளுடன் ஒப்பிடும் போது கணிசமான அளவு குறைவாகும் என திறைசேரி செயலாளர் சுட்டிக்காட்டினார். கடனைப் பெறாமல் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டின், இருப்புக்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்றுமதி வருமானம் மற்றும் வெளிநாட்டு பண வரவுகள் ஆகியவற்றினை அதிகரிப்பதன் மூலம் இருப்பினை அதிகரித்துக் கொள்ள முடியும். 2025 ஆம் ஆண்டாகும் போது திருப்பிச் செலுத்த வேண்டிய இறையாண்மை பத்திரங்கள் மற்றும் பிற கடன்கள் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அண்மையில் செலுத்தப்பட்டது. கடன் முகாமைத்துவத்தினை வெற்றிக் கொள்வதற்கான பிரதான வழி வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பது என ஆடிகல வலியுறுத்தினார்.