அமெரிக்காவில் மீண்டும் முககவசம் அணிவது கட்டாயம்

169 0

அமெரிக்க மக்கள் தொகையில் 49 சதவீதம் பேருக்கு தடுப்பூசியின் இரு டோஸ் செலுத்தப்பட்டது.

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இதையடுத்து கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது சில மாதங்களாக அமெரிக்காவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதாக அரசு அறிவித்தது. அமெரிக்க மக்கள் தொகையில் 49 சதவீதம் பேருக்கு தடுப்பூசியின் இரு டோஸ் செலுத்தப்பட்டது.

மேலும் வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்ததால் பொதுமக்கள் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே அமெரிக்காவில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகளவில் அதிகரித்து உள்ளது. அங்கு நேற்று புதிதாக 61 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

 

கொரோனா வைரஸ்

 

புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், லூசியானா ஆகிய மாகாணங்களில் தினசரி பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. டெல்டா வகை வைரஸ் பரவல், மீண்டும் தொற்று அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பால் அமெரிக்காவில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய இயக்குனர் ரோசெல் வலென்ஸ்கி கூறியதாவது:-

தடுப்பூசி செத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வேளையில் டெல்டா வகை வைரஸ் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது புதிய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. எனவே கணிசமான மற்றும் அதிக வைரஸ் பரவல் உள்ள பகுதிகளில் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் உள்பட அனைவரும் பொது உட்புற இடங்களில் முகக்கவசங்களை அணியுமாறு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பரிந்துரை செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.