133 யோகாசனங்கள் செய்து 7 வயது சிறுமி அசத்தல்

136 0

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளதைபோல் 133 யோகாசனங்கள் செய்து விழிப்புணர்வு மற்றும் உலக சாதனை முயற்சியை மேற்கொண்டார்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திருவருட்பா ஆசிரமம் உள்ளது. இங்கு திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா, சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் ஆகியவை இணைந்து நேற்று கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின..

இதில் திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜாராமன்- சவுபர்ணிகா ஆகியோரின் 2-ம் வகுப்பு படிக்கும் மகள் சமந்தா என்ற 7 வயது சிறுமி யோகாசனங்களை செய்து விளக்கினார்.

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளதை போல் 133 யோகாசனங்கள் செய்து விழிப்புணர்வு மற்றும் உலக சாதனை முயற்சியை மேற்கொண்டார்.

நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் சிறுமி சமந்தா பத்மாசனம், ஜானுசிரசாசனம், யோகமுத்ரா, பர்வதாசனம், யோகபார சிரசாசனம், தனுராசனம் உள்பட 133 யோகாக்களை செய்து காண்பித்தார்.

முன்னதாக அவர் 4 பேப்பர் கப் மீது அமர்ந்து பத்மாசனம், தாடாசனம், பர்வதாசனம் ஆகியவை செய்து காண்பித்து அசத்தினார். முன்னதாக நிகழ்ச்சியை திருவண்ணாமலை கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையை சேர்ந்த நேரு தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல் மாறன் கலந்து கொண்டு  யோகா செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிக்கு பரிசு வழங்கினார்.

முடிவில் யோகா ஆசிரியை கல்பனா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் செய்திருந்தனர்.