புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான காலக்கெடு யூலை 30ஆம் திகதி- தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் வேண்டுகோள்

166 0

புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான காலக்கெடு யூலை 30ஆம் திகதி தவறவிடவேண்டாம் எனத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைத் தேர்தல்கள் ஆணையம் புதிய வாக்காளர்களாகத் தகுதி பெற்றுள்ளவர்கள் தங்கள் பெயர்களைத் தேருநர் இடாப்பில் சேர்த்துக் கொள்வதற்கான பதிவுகளை யூலை 30ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளவேண்டும் என அறிவித்துள்ளது.

மேலும் கொரோனாப் பேரிடர் காரணமாக அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று படிவங்களை விநியோகித்து வாக்காளர்களைப் பதிவு செய்யும் வழமையான நடைமுறை இந்த ஆண்டு நடைபெறாது என்றும் தகுதி பெற்ற வாக்காளர்கள் தாமாகவே கிராம சேவையாளரிடம் சென்று படிவங்களைப் பெற்றுப் பூர்த்தி செய்து கையளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

எனவே பதிவு செய்வதற்கு இன்னும் இரண்டொரு தினங்களே இருக்கும் நிலையில் புதிய வாக்காளர்கள் இந்தக் காலக்கெடுவைத் தவற விட்டுவிடவேண்டாம் எனத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் மகேசன் கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மகேசன் கஜேந்திரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்

வாக்குரிமை இலங்கைக் குடிமகனாகவுள்ள ஒவ்வொருவரினதும் அடிப்படை உரிமையாகும். இலங்கையில் வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டுவரும் யூன் 01 ஆம் திகதியன்று 18 வயது பூர்த்தியடைந்த இலங்கைக் குடிமகனாகவுள்ள எவரும் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். தேருநர் இடாப்பில் பெயர்களைப் பதிவு செய்வதன் மூலம் மாத்திரமே இவ்வாக்குரிமை உறுதி செய்யப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலே பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடையும் போது தேர்வாகும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைவடையும்.

உதாரணமாக 1989ஆம் ஆண்டு யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட நிலையில் வாக்காளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்ததன் காரணமாகத் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7ஆகக் குறைவடைந்துள்ளது.

2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி யாழ் மாவட்டத்துக்கு 6 பாராளுமன்ற ஆசனங்களே ஒதுக்கப்பட்டுள்ளன.
வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து செல்லுதல் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்களில் மாத்திரம் குறைவை ஏற்படுத்தும் ஒன்றல்ல. மாவட்டத்தின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் நிதிஇ மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கை போன்றவற்றிலும் குறைவை ஏற்படுத்தும் ஒன்றாகும்.

அந்தவகையில் வாக்களிக்கத் தகுதிபெற்ற அனைவரும் தங்களை வாக்காளராகப் பதிவு செய்தல் ஒரு தேசிய கடமையாகும். எனவே யூலை 30 ஆம் திகதிக்கு முன்பாக புதிய வாக்காளர்கள் அனைவரும் தமது பகுதிக் கிராமசேவையாளரிடம் சென்று தவறாது பதிவுகளை மேற்கொள்ளுதல் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.