Breaking News
Home / கட்டுரை / இலங்கை பிரியப் போவது தமிழர்களால் அல்ல! – புகழேந்தி தங்கராஜ்

இலங்கை பிரியப் போவது தமிழர்களால் அல்ல! – புகழேந்தி தங்கராஜ்

flag-map_of_sri_lanka_alt-600x300நாண் அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர் மருட்டி யற்று….
என்கிறான் வள்ளுவப் பெருந்தகை.

செய்த குற்றத்துக்காகத் தலைகுனியாமல் கூச்சநாச்சமின்றி நம்மிடையே நடமாடுபவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் தலையில்தான் தட்டுகிறான் வள்ளுவன். கழுத்தில் கயிற்றைக் கட்டி ஆட்டினால் ஆடுகிற மரப்பாச்சிப் பொம்மையின் ஆட்டத்துக்கும் வெட்கங்கெட்ட இந்த மனிதர்களின் நடமாட்டத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்கிறான்.

இதற்கு நிகழ்கால இலக்கணமாகத் திகழ்கின்றனர் இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமரும்! தமிழினத்தைத் திட்டமிட்டு அழித்த சிங்கள இனத்தின் இழிசெயலுக்காக வெட்கித் தலைகுனியாமல் உலகெங்கும் உலா வந்துகொண்டிருக்கிறார்கள் இருவரும்! என்ன விலை கொடுத்தாவது நடந்த இனப்படுகொலையை மூடிமறைந்துவிட வேண்டும் – என்பதுதான் அவர்களது முதல் முக்கிய வேலைத்திட்டம்.

முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் தமிழ் மக்களின் பிணக்குவியல்மீதுதான் மைத்திரி – ரணிலின் அரியணை போடப்பட்டிருக்கிறது. அதை மறைப்பதற்காகத்தான் சர்வதேச விசாரணை பற்றி மூச்சே விடாமல் நல்லிணக்கம் நல்லிணக்கம் என்று மீண்டும் மீண்டும் கதைக்கிறார்கள். ‘சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய விசாரணையின் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கமுடியும்’ என்கிற ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் குரலை அடியோடு நிராகரிக்கிறார்கள்.

‘இலங்கையில் விசாரணை நடைமுறைகளும் சட்ட அமலாக்கமும் நீதித்துறையும் நம்பகமானவை. போர்க்குற்றங்கள் தொடர்பில் எங்களை நாங்களே விசாரித்துக் கொள்ளமுடியும்’ என்று சர்வதேசத்திடம் சாதுர்யமாகப் பேசுகிறார்கள் மைத்திரியும் ரணிலும்!

கொழும்பில் அந்த மரப்பாச்சிகளின் குரல் வேறு மாதிரி ஒலிக்கிறது. ‘சர்வதேசம் நம்மை ஆட்டிப்படைக்க அனுமதிக்க மாட்டோம்…. ராணுவத்தின் மீது ஒரு துரும்பு கூட பட விடமாட்டோம்’ என்று சவால் விடுகிறார்கள். அதைவிடக் கொடுமை அவர்கள் பேசுவதுதான் சரியென்பது மாதிரி அசைவற்றுக் கிடக்கிற தமிழ்த் தலைமைகளின் கள்ளமௌனம்.

இப்படியொரு நிர்கதியான நிலையில்தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை வழக்கில் மிக மிக முக்கியமான ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. நீதி மறுக்கப்பட்ட ஒரு தீர்ப்பை ‘மிகமிக முக்கியமான தீர்ப்பு’ என்று குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது.

2006 நவம்பர் 10ம்தேதி காலையில் கொழும்பு நகரில் உயர் பாதுகாப்புப் பகுதி ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்டார் – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ். அவர் மீது 5 குண்டுகளும் காவல்துறையைச் சேர்ந்த அவரது மெய்க்காப்பாளர் மீது 8 குண்டுகளும் பாய்ந்திருந்தன.

ரவிராஜ் கொலையின் சூத்திரதாரி கோதபாய ராஜபக்ச என்றும் இதற்காக சில கோடி ரூபாய் கைமாறியதாகவும் செய்திகள் வெளியாகின. ரவிராஜ் தமிழினத்தின் குரலை அழுத்தமாகப் பதிவு செய்த ஓர் இளம் வழக்கறிஞர். (சுட்டுக் கொல்லப்பட்டபோது அவருக்கு 44 வயது.) அதற்காகவே கோதபாய அவரைக் குறிவைத்திருக்கக் கூடும்.

ரவிராஜ் மனித உரிமைகளுக்கான பிரபல சட்டத்தரணி. அவரது ரவிராஜ் அசோசியேட்ஸ் நிறுவனம் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான வழக்குகளைக் கையாண்டது. அரசியலில் நுழைந்து 1997ல் யாழ் மாநகரசபை உதவி முதல்வரான ரவிராஜ் 98ல் முதல்வரானார். அதன்பிறகு இரண்டுமுறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கொலைச் சம்பவம் நடந்த நவம்பர் 10ம்தேதி காலையில் தொலைக்காட்சி ஒன்றின் நேரலை விவாதத்தில் பங்கேற்ற ரவிராஜ் இனப்பிரச்சினை தொடர்பான தமிழர் நிலையை விரிவாக விளக்கினார். நிகழ்ச்சி முடிந்து காலை 8 மணிக்கு தொலைக்காட்சி நிலையத்திலிருந்து வெளியே வந்தவர் தமது வீட்டுக்குத் திரும்பும் வழியில் சுட்டுக்கொல்லப்பட்டார். இலங்கைப் படைத்துறையின் காவல்துறை தலைமை அலுவலகம் முன்பே அந்தப் படுகொலை நடந்தது.

ரவிராஜ் படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் 6 பேர். அவர்களில் 3 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள். இருவர் கருணா கோஷ்டி. ஆறாவது நபர் காவல்துறை அதிகாரி. குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் இறந்துவிட்டார். இருவர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துவிட்டனர். கடற்படையைச் சேர்ந்த மூவர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இலங்கை ராணுவத்தால் அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டது. அது விசாரணையில் தெரியவந்தது. கொலைச் சம்பவத்தை நேரில் பார்த்த பலர் குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியம் வழங்கியிருந்தனர். அவர்களை அடையாளம் காட்டியிருந்தனர். நீதிமன்றத்தின் முன் ஏகப்பட்ட ஆதாரங்களும் வாக்குமூலங்களும் இருந்தன.

இவ்வளவு வலுவான வழக்காக இருந்தபோதிலும் 10 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து சென்ற வாரம் ஒரு நள்ளிரவில் கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தின் இந்த முடிவுக்கு அடிப்படையாக இருந்தது இந்த வழக்கின் ஜூரிகளாக இருந்த 7 பேர். ஜூரிகள் 7 பேரும் சிங்களவர்கள் என்பதும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்கிற முடிவை அவர்கள் ஏகமனதாக எடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கண்ணால் கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் மட்டுமே தண்டித்துவிட முடியாது – என்று தெரிவித்துவிட்டனர் 7 ஜூரிகளும்! இந்த சான்றுகளெல்லாம் அவர்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டை நிரூபிக்கப் போதுமானவை அல்ல – என்பது அந்த மேதாவிகளின் கருத்து.

ஒரு நாள் முழுக்க விவாதம் நீண்டது. அதன்பிறகே ஜூரிகள் அப்படியொரு முடிவுக்கு வந்ததாகவும் டிசம்பர் 24ம் தேதி அதிகாலை (நள்ளிரவு 12.25 மணி) தீர்ப்பு வெளியானதாகவும் இலங்கை வரலாற்றில் இப்படியொரு நள்ளிரவுத் தீர்ப்பு வருவது இதுதான் முதல் முறையென்றும் கொழும்பு பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன.

நள்ளிரவு என்பது வேண்டுமானால் முதல் முறையாக இருக்கலாம்… ஆனால் இதுபோன்ற வழக்குகளில் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்படுவது இது முதல் முறையல்ல! குமாரபுரத்தில் 26 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கையும் இப்படித்தான் பல ஆண்டுகளாக இழுத்தடித்தது இலங்கை நீதித்துறை. கடைசியில் குற்றஞ்சாட்டப்பட்ட சிங்கள ராணுவத்தினர் அனைவரும் ஜூரிகளால் விடுவிக்கப்பட்டனர். ‘இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளை சாட்சிகளால் நினைவுவைத்துக் கொண்டிருக்க முடியுமா? அதை எப்படி ஏற்க முடியும்’ என்கிற வினோதமான விளக்கத்துடன் குற்றவாளிகளான சிங்கள ராணுவத்தினர் அனைவரையும் ஜூரிகள் விடுவித்துவிட்டனர்.

சிங்கள மக்களை அதிகமாகக் கொண்ட இலங்கையின் ஊவா மாகாணத்தின் புனர்வாழ்வு முகாம் ஒன்றில் ‘புலிகள்’ என்று சந்தேகிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். நிராயுதபாணியாக இருந்த அவர்களைப் போலீசாரும் சிங்கள கிராமவாசிகளும் சேர்ந்தே படுகொலை செய்தனர். அந்த வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்தனர் சிங்கள ஜூரிகள்.

மைத்திரிபாலா அரசில் அமைச்சராக இருக்கும் தமிழரான மனோ கணேசன் ரவிராஜ் வழக்கு தீர்ப்பைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ‘தீர்ப்பைப் படிக்கும்போது ரவிராஜ் தன்னைத்தானே சுட்டுக்கொண்டாரா என்ன – என்கிற சலிப்புதான் எழுகிறது. இந்தத் தீர்ப்பு தமிழ் மக்களையும் முற்போக்குவாதிகளையும் கடும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. இலங்கை நீதித்துறையை உலகமும் தமிழர்களும் இனியும் நம்ப முடியுமா என்கிற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது’ என்று கூறியிருக்கிறார் அவர்.

‘இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையே விசாரணை நடத்தி நீதி வழங்கும் என்று இனியும் யாராவது நம்பினார்களென்றால் அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்’ என்று கூறியிருக்கிறார் வடமாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அண்ணன் சிவாஜிலிங்கம். ‘ரவிராஜை மீண்டும் கொன்றுவிட்டனர்’ என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

இந்த வழக்கில் ரவிராஜ் தரப்பு வழக்கறிஞர் திருவாளர் சுமந்திரன். ஜூரி முறை குறித்து இப்போது கடுமையாகச் சாடுகிறார் அவர். இந்த வழக்குக்கு ஜூரிகள் வேண்டாம் என்ற தனது கோரிக்கை பலனற்றுப் போய்விட்டது என்பது சுமந்திரனின் வருத்தம்.

நாடுகடந்த தமிழீழ அரசின் சார்பில் சுமந்திரனைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் சகோதரர் மாணிக்க வாசகர். ‘இப்போது புலம்பி என்ன பயன்? முழுக்க முழுக்க சிங்களவர்களையே கொண்ட ஜூரிகள் அமைக்கப்பட்டபோதே தீர்ப்பு எழுதப்பட்டுவிட்டது என்பதை சுமந்திரன் புரிந்துகொள்ளவேயில்லையா?’ என்பது அவரது கேள்வி. எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தூக்கிக்கொடுத்தவர்களுக்கு நன்றி விசுவாசத்தைக் காட்டுவதற்காக சர்வதேச விசாரணையை வலியுறுத்த மறுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்த ஏமாற்று வேலையில் பங்கிருக்கிறது – என்பது மாணிக்கவாசகர் போன்ற நண்பர்களின் வாதம்.

தமிழர் தரப்பின் இந்தக் குமுறல்களையெல்லாம் விட அழுத்தமானதாக இருக்கிறது கொழும்பு டெலிகிராபில் வெளியான (சிங்கள) வாசகர் ரஞ்சன் பெர்னாண்டோவின் கருத்து.

‘ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் பட்டப்பகலில் 5 முறை சுடப்படுகிறார். அவரது மெய்க்காவலரான போலீஸ்காரர் 8 முறை சுடப்படுகிறார்.
விசாரணை நடத்தவே 10 ஆண்டு ஆகிறது.
விசாரணை அதிகாரிகள் நீதிபதி ஜூரிகள் அனைவருமே சிங்களவர்.
5 குற்றவாளிகளையும் குற்றமற்றவர்கள் என்று அவர்கள் அறிவிக்கின்றனர் விடுவிக்கின்றனர்.
அனைவரையும் சமமாகக் கருதும் நேர்மையான நடுநிலையான நீதித்துறை இலங்கையில் இருக்கிறது என்று மைத்ரியும் ரணிலும் இந்த உலகை எப்படி நம்பவைக்கப் போகிறார்கள்?
நாட்டை இரண்டாகப் பிரிக்கப்போவது இந்த மகானுபாவர்கள்தான்! தமிழர்கள் அல்ல!’ என்கிறார் ரஞ்சன்.

ரஞ்சன் பெர்னாண்டோ சொல்வதுதான் யதார்த்தம். அதை உணராமல் ஒரே நாடாகத்தான் இருப்போம் என்று நாண்டுகொண்டு நிற்கிற தமிழ்த் தலைவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் உங்களுக்கு இருக்கிற அளவுக்கு விருப்பம் சிங்களத் தலைவர்களுக்கும் இருக்க வேண்டாமா?

தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் மெஜாரிட்டி இனத்தைச் சேர்ந்த குற்றவாளிகளைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்று சிங்களத் தலைவர்கள் நினைக்கின்றனர். தமிழர்களையும் அவர்களிடையே தங்கள் மரியாதையையும் காப்பாற்ற வேண்டுமென்றால் இவ்வளவுக்கும் பிறகு தமிழ்த் தலைவர்கள் என்ன செய்ய வேண்டும்? நீதித்துறையின் பாரபட்சத்தை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராட வேண்டாமா? ‘மேல்முறையீடு செய்வோம்’ என்கிற வழக்கமான பல்லவிதானா இப்போதும்!

சிங்கள நீதித்துறையின் மீது எங்களுக்கு இப்போதுகூட நம்பிக்கை இருக்கிறது – என்று மக்களுக்குச் சொல்கிறார்களா? அல்லது சர்வதேசத்துக்கு அப்படியொரு சிக்னல் கொடுக்கிறார்களா? அந்த நம்பிக்கை அபத்தமானது மட்டுமல்ல அயோக்கியத்தனமானது. அதைத் தலைவர் பெருமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மைத்திரியின் இலங்கையும் அதன் நீதித்துறையும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்குப் புரியவேயில்லையா?

சென்ற அக்டோபரில் நீதித்துறை மீது நேரடியாகப் பாய்ந்தார் மைத்திரி. ராணுவப் புலனாய்வு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்தார். அவர் அப்படிப் பேசிய அடுத்த கணமே லசந்த விக்கிரமதுமதுங்க கொலைவழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராணுவப் புலனாய்வு அதிகாரி விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பிரகீத் காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ராணுவப் புலனாய்வு அதிகாரியும் விடுதலை செய்யப்பட்டார்.

இலங்கையின் சட்டமும் நீதியும் தமிழர்களுக்கோ தமிழர்களுக்கு நியாயம் கேட்பவர்களுக்கோ பயன்படப் போவதில்லை. அவை சிங்கள இனத்துக்கானவை. இது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. செத்தாலும் இலங்கைப் பிரஜையாகத்தான் சாவேன் – என்று முழங்குபவர்கள் வேண்டுமானால் கொஞ்சம் கூடுதல் காலம் விட்டு வைக்கப்படலாம். என்றாலும் மற்ற தமிழர் அனைவரும் கொல்லப்பட்ட பிறகு இன்னொரு தமிழன் எங்கே என்கிற தேடலின்போது அவர்கள் அகப்படாமல் போய்விடுவார்களா என்ன?

About சிறி

மேலும்

தமிழ்த் தே­சி­யக் கூட்­ட­மைப்பு பிள­வு­ப­டு ­வது அநே­க­மாக நிச்­ச­ய­மா­கி­விட்­டது!

தமிழ்த் தே­சி­யக் கூட்­ட­மைப்பு பிள­வு­ப­டு ­வது அநே­க­மாக நிச்­ச­ய­மா­கி­விட்­டது. முன்­னர் எதிர்­பார்த்­த­படி ஈ.பி.ஆர்.எல்.எவ்.கட்சி கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வில­கித் தனி­வ­ழி­யில் செல்­வ­தற்­குத் தீர்­மா­னித்து …

Facebook Auto Publish Powered By : XYZScripts.com