டயகம சிறுமியின் மரணம் குறித்த பல தகவல்களை மூடிமறைப்பதற்கு முயற்சி – மனித உரிமை செயற்பாட்டாளர் குற்றச்சாட்டு

328 0

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்த வேளை தீக்காயங்கள் காரணமாக சிறுமி உயிரிழந்தமை குறித்த தகவல்களை மூடிமறைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன எனதகவல்கள் வெளியாகியுள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர்பிரணீதா வர்ணகுலசூரிய( ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பு) தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு என்ன நடந்தது என்பது குறித்து தங்கள் அமைப்பு ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள அவர் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியது யார்? தீ வைத்துக் கொன்றது யார்? கொல்லப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா எனதொலைக்காட்சி பேட்டியொன்றில்ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பிரணீதா வர்ணகுலசூரிய பி்ன்வருமாறு பதிலளித்தார்.

டயகம சிறுமி தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகச் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

16 வயதான சிறுமியின் வயதை எல்லோரும் மூடி மறைக்க முயல்வதால் குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது.

குறித்த சிறுமி தீக்காயங்களுக்குள்ளான பின் வந்து அமர்ந்து கொண்டு குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார் என்றும் நீரில் குதித்தார் என்றும் கூறி சரியான தகவல்களைத் தெரிவிக்காமல் மறைக்கின்றார்கள்.

குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்ட சம்பவம் குறித்து சரியான தகவலை பொலிஸாரோ அல்லது தாயாரோ கூறவில்லை.

இந்நிலையில், டயகம சிறுமி காலை 6.30 மணியளவில் தீ வைத்துக்கொண்டமையால் காப்பெற்றால் சுற்றி நீருக்குள் நனைத்ததாகவும், 111 என்ற எண்ணுக்கு அழைத்து தகவல் வழங்கியதாகவும் குறித்த சிறுமியின் மாமா வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் ஜூலை மாதம் 03 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. ஆனால் கடந்த 06 ஆம் திகதியே நாம் அறிந்துகொண்டோம் என பிரணீதா வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த 06 ஆம் திகதி குறித்த சம்பவம் தொடர்பாக புலனாய்வு விசாரணையை ஆரம்பித்து குறித்த சம்பவம் இடம்பெற்றது உண்மையா? இல்லையா என ஆராய்ந்து பார்த்தோம்.

கடந்த 07 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் குறித்த சிறுமி வசிக்கும் டயகம பொலிஸாருடன் தொடர்பு கொண்டோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக அறிந்திருக்கவில்லை.
குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆனால் டயகம பொலிஸார் அறிந்திருக்கவில்லை. எனவே குறித்த சம்பவம் தொடர்பாக அறிவிக்குமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தோம்.

அதன்பின்னர் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவித்தோம், 1929க்கு அழைப்பு விடுத்து முறைப்பாடு செய்தோம்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக ரிஷாத் பதியுதீனின் வீட்டில் குறித்த சிறுமி தாக்கப்பட்டிருக்கலாம் என சிறுமியின் அம்மா, அப்பா, சகோதரன் மற்றும் சகோதரிகள் சந்தேகப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை பொலிஸாரைத் தவிர டயகம சிறுமியின் தாயாருடன் கலந்துரையாடியுள்ளோம். அத்தோடு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டுக்கு சிறுமியை பணிப் பெண்ணாக அழைத்துச் சென்ற பொன்னையா என்ற தரகருடனும் அவரது மகளுடனும் கதைத்துள்ளோம்.

பொன்னையாவின் மகள் பத்மா சில வருடங்களுக்கு முன்னர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்தமையால் கலந்துரையாடினோம்.

இதற்கு முன்னர் எனது மகள் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்தமையால் எந்தச் சந்தேகமும் இன்றி டயகம சிறுமியை பணியில் இணைத்தேன் என பொன்னையா கூறியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொன்னையா ரூபா 50 ஆயிரம் தரகுப் பணம் பெற்றுள்ளதாகவும், டயகமவிலிருந்து சிறுமியை அழைத்துச் செல்வதற்காக முச்சக்கர வண்டிக்கு 50 ஆயிரம் வழங்கியதாகவும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் இதுவரை 2 இலட்சம் ரூபா பணம் பெற்றுள்ளதாகவும் பொன்னையா எங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமிக்கு மாதாந்த சம்பளமாக 20 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சிறுமியின் சம்பளப் பணம் தனது வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டதாகவும் பொன்னையா தெரிவித்துள்ள அதேவேளை சம்பளப் பணம் தமக்குக் கிடைத்ததாக சிறுமியின் தாயாரும் தெரிவித்துள்ளார்.
கடந்த 09 மாதங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு கொழும்பு சென்றதாக சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

பொன்னையா சரியான திகதி சொல்வதால் சந்தேகம் எழுந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் மேற்கொண்ட விசாரணையில் எவரும் சரியான திகதியைச் சொல்லவில்லை, எவரும் சரியான தகவலைத் தெரிவிக்கவில்லை.

அத்துடன் பிள்ளையின் வயதை மறைக்கத் தான் எல்லோரும் முயல்கிறார்கள்.தற்போது குறித்த சிறுமிக்கு 16 வயதும் 8 மாதங்களும் பூர்த்தியாகியுள்ளன.

மேலும், நாங்கள் ஊரிலிருந்து வந்த ஏழு நாட்களும் எங்களை நுழைவாயிலில் ரிஷாத்தின் வீட்டினுள் அனுமதிக்கவில்லை என சிறுமியின் தாய் கூறினார் என அவர் தெரிவித்துள்ளார்.

ரிஷாத் வீட்டார், “சிறுமி இங்கே இல்லை புத்தளத்தில் உள்ளார் என எங்களுக்குத் தெரிவித்தனர்” என சிறுமியின் தாயார் கூறினார்.

குறித்த சிறுமி தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் வரை குறித்த சிறுமியின் தாயை அனுமதிக் கவில்லை.

ஜூலை மாதம் 4 ஆம் திகதி அல்லது 5 ஆம் திகதி தான் வீட்டின் நுழைவாயிலில் அனுமதித்ததாகத் தாய் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி தீ காயங்களுக்குள்ளானதாகப் பொன்னையா தாயாருக்கு அறிவித்த நிலையில் தாயார் முன்னர் ரிஷாத் பதியுதீனின் வீட்டுக்குச் சென்றபோது நன்றாக உபசரித்த பின்னர் மகள் தீக்காயங்களுக்குள்ளானதாக வீட்டின் குடும்ப உறுப்பினர் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் பெரிய ஒரு கலவரம் இடம்பெற்றது. அதன் பின்னர் தான் தாய் வைத்தியசாலைக்குச் சென்று டயகம சிறுமியைப் பார்த்துள்ளார்.

மண்ணெண்ணெயை தன் மேல் ஊற்றிக்கொண்டதாகவும், தீ பற்றி எரிந்த போது தண்ணீர் வாங்கிக் குடித்து விட்டு வீட்டிலிருந்த மீன் தொட்டியில் குதித்ததாகவும் சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுவது சரியான தகவல்களாக இல்லை. சிக்கலை ஏற்படுத்துவதாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி தன்னால் இங்கிருக்க முடியாது என தாயாருக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார். அவ்வீட்டில் பணி புரியும் இளைஞனின் தொலைபேசி ஊடாக குறித்த சிறுமி தன்னுடன் பேசுவதாகத் தாய் கூறினார் என அவர் தெரிவித்துள்ளார்.

தரகர் பொன்னையாவின் தொலைபேசியில் தான் தாய் பேசுவதாகவும், ஒருநாள் தொலைபேசியை ஸ்பீக்கரில் போட்டுப் பேசிய போது எனக்கு இங்கே இருக்க முடியாது என்றும் தும்புத் தடியால் அடிக்கிறார்கள் என்றும் அந்த நேரம் வீட்டு வேலை செய்யும் இளைஞர் அடித்ததாகவும் சிறுமி தன்னிடம் கூறியதாக தாயார் தெரிவித்துள்ளார்.

குறித்த வீட்டிலுள்ள எஜமானி, உனக்கு இதைப் பற்றி யார் சொல்லச் சொன்னது, நீ மெதுவாக வேலை செய்வதால் தான் உன்னைத் திட்டுவது, ஏசுவது என அவர் திட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது மகள் சிறுமி என்பதால் அடிக்க வேண்டாம் என அம்மா தெரிவித்துள்ளார்.

அம்மா 06 ஆம் மற்றும் 07 ஆம் திகதி வரவிருந்த நிலையில் குறித்த சிறுமி ஏன் இவ்வாறு செய்துகொள்ள வேண்டும்?

உனக்கு அந்த இடத்தில் இருக்க முடியா விட்டால் நான் அங்கு வருகிறேன் என தான் கூறியதாக தாயார் தெரிவித்துள்ளார்.

பெண் பிள்ளை என்று கூட பாராமல் வீட்டின் வெளியே அறை வழங்கப்பட்டுள்ளதாக சிறுமியின் தாயாரும் பொன்னையாவும் தெரிவித்தனர்.

அங்கு வேலை செய்யும் இளைஞர் மீது சந்தேகம் இருப்பதாக தாயார் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

உண்ண உணவு இல்லாத காரணத்தால் தான் மகளை வேலைக்கு அனுப்பினோம் என அவர் தெரித்துள்ளார்.

தாய் வருவது மகளுக்கு விருப்பம் இல்லையா அல்லது தாய் உண்மை நிலையை அறிந்துவிடுவார் என யாராவது செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியோ அல்லது ஆளும் கட்சியோ இது குறித்து எவரும் கதைக்கவில்லை.

பணத்திற்காகவோ, கட்சிக்காகவோ அல்லது வேற எந்தக் காரணங்களுக்காகவோ மறைக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் வாக்குமூலம் பெற முடியாமல் போனது என சகல ஊடங்களிலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி ரிஷாத் பதியுதீனின் வீட்டில் கொல்லப்பட்டிருக் கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளாகவும், பாலியல் துஷ் பிரயோகம் அங்கு இடம்பெற்றிருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை இடம் பெறுவதாகத் தெரியவில்லை என்றும் டயகம சிறுமி உயிரிழக்கும் வரை அறிக்கை எதுவும் பெற்றிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.