அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்கும் விழா, நாளை காலை 11 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 5-ந்தேதி காலமானார்.
கட்சியின் புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காக அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அதி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் சென்று போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்தார்.
அப்போது, பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சசிகலாவிடம் வலியுறுத்தப்பட்டது. அவரும் அதற்கு சம்மதித்தார். பொதுச்செயலாளர் பதவியுடன் சேர்த்து அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பும் சசிகலாவிடமே வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சசிகலா இன்று மாலை 4 மணி அளவில், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். ஜெயலலிதா சமாதியில் பொதுக்குழு தீர்மான புத்தகத்தை வைத்து சசிகலா வணங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்கிறார்கள்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்கும் விழா, நாளை காலை 11 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.இந்த விழாவில் புதிய பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொள்கிறார்.
இந்த விழால் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.விழாவில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் முறைப்படி அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஏற்று வெளியூர்களில் உள்ள எம்.எல்.ஏ.க்களும் இன்று சென்னை வந்துள்ளனர்.
அவர்கள் இன்று மாலை சசிகலா பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.தி.மு.க.வில் இருந்து பிரிந்த பின்னர் எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கினார். அப்போது கட்சியின் நிறுவனராகவும், கட்சியின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் 1987-ம் நெடுஞ்செழியன் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். அப்போது எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் அ.தி.மு.க. 2 அணிகளாக உடைந்து மீண்டும் ஒரே அணியானது. அதன்பிறகு 1988 முதல் 2016 வரை 28 ஆண்டுகள் ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி வகித்தார். தற்போது அ.தி.மு.க.வின் 4-வது பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்கிறார்.

