‘டாஸ்மாக்’ கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை

116 0

மதுபான கிடங்குகள், ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளில் 90 நாட்களை கடந்த மது வகைகள் இருக்க கூடாது என மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ‘டாஸ்மாக்’ மாவட்ட மேலாளர்களுக்கு மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
‘டாஸ்மாக்’ நிர்வாகத்தின் ஆலோசனை கூட்டம் அதன் மேலாண்மை இயக்குனர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ‘டாஸ்மாக்’ மாவட்ட மேலாளர்களுக்கு பல்வேறு அதிரடி உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:-
மதுபான கிடங்குகள், ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளில் 90 நாட்களை கடந்த மது வகைகள் இருக்க கூடாது. எனவே முன்னுரிமை கொடுத்து, அந்த மதுபானங்களை உடனடியாக விற்பனை செய்ய வேண்டும்.
மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. எனவே இதன் மீது மாவட்ட மேலாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுக்கடைகளை திறப்பதற்கு முன்பாக சென்று, திறந்தவுடன் மேற்பார்வையாளர் உள்பட யார்-யார் அங்கு இருக்கிறார்கள் என்பதை செல்போனில் படம் எடுத்து தலைமை அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு மாவட்ட மேலாளர்கள் அனுப்ப வேண்டும். மதுக்கடைகளில் வெளிநபர்கள் இருக்கக்கூடாது.
கோப்புபடம்
‘டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர் அனுமதியின்றி யாருக்கும் இடமாறுதல் உத்தரவு வழங்க கூடாது. அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பணியாளர்கள் நலன்குறித்து கேட்டறிந்து மாவட்ட மேலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட மேலாளர்களால் முடியாத கோரிக்கையை முதுநிலை மண்டல மேலாளர்கள் தொழிற்சங்கங்களிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களாலும் நிறைவேற்ற முடியாத கோரிக்கை என்றால் மட்டுமே மேலாண்மை இயக்குனரிடம் தொழிற்சங்க பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும்.
மேலாளர்கள் மீது முறைகேடு புகார்கள்
எம்.பி.ஏ. படித்து பணியில் உள்ள மாவட்ட மேலாளர்கள் மீது அதிகளவில் முறைகேடு புகார்கள் வருகின்றன. எனவே அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மேற்கண்டவாறு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.