கறுப்பு யூலையை நினைவேந்த மூதூர் நீதிமன்றம் தடை உத்தரவு!

213 0

ஈழத் தமிழரின் வரலாற்றின் முக்கியமான திருப்பு முனையாகவும், அழிக்க முடியா வரலாற்றுப் பதிவாகவும் அமைந்துள்ள கறுப்பு யூலை படுகொலையை சம்பூர் காவற்துறை பிரிவில் நினைவுகூரத் தடை உத்தரவு வழங்கி மூதூர் நீதிவான் நீதிமன்றம் நேற்று கட்டளையிட்டுள்ளது.

சம்பூர் காவற்துறையினர் நீதிமன்றத்தில் முன்வைத்த விண்ணப்பத்தை ஆராய்ந்து ஒரு குழுவினருக்கு இந்தத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி கறுப்புயூலை படுகொலை நினைவேந்தலை நடத்த ஒரு தரப்பினர் தயாராகி வருகின்றனர் என்று காவற்துறையினர் மன்றுக்கு தெரிவித்தனர்.

காவற்துறையினரின் விண்ணப்பத்தைப் பரிசீலித்த பின்னர், முதூர் நீதிவான் பாஸ்மிலா பானு, வெருகல் பிரதேச சபையின் துணைத் தலைவர் தேவநாயகம் சங்கர், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் திருகோணமலை மாவட்ட செயலாளர் கணேஷபிள்ளை குகன் உள்ளிட்டோருக்குத் தடை உத்தரவு கட்டளையை வழங்கினார்.

1983ஆம் ஆண்டு, யூலை 23ஆம் திகதி திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, நாட்டில் தமிழர்களுக்கு எதிரான இன வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

இதில், நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; காயப்படுத்தப்பட்டனர்; காணாமல் ஆக்கப்பட்டனர்.

தமிழர்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் சிங்களக் காடையர்களால் எரித்து அழிக்கப்பட்டன – சூறையாடப்பட்டன.

தென்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டு, அகதிகளாக வடக்குக்கு  அனுப்பிவைக்கப்பட்டனர்.