ரிஷாட் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் – CIDயிலும் முறைப்பாடு!

153 0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த மலையகச் சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்படி்டுள்ளது.

தேசிய சங்கங்களின் ஒன்றியம், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இந்த முறைப்பாட்டைப் பதிவுசெய்துள்ளது.

சிறுமியின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி, இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதினின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

கடந்த 03ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.