`சிறுமிக்கு நீதி கிடைக்க ரிஷாட் ஒத்துழைக்கவும்`

190 0

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் எரியுண்டு உயிரிழந்த மலையக சிறுமிக்கு நீதி கிடைக்க பொறுப்புள்ள அரசியற் கட்சியின் தலைவர் என்கிற ரீதியில் ரிஷாட் பதியுதீன்ஒத்துழைக்க வேண்டுமென கூட்டமைப்பு எம்.பி கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (20) நடைபெற்ற வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், குறைந்து இரு தசாப்தங்களுக்கு ஆட்சியில் இந்த அரசாங்கம் நீடிக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரு வருடங்களுக்குள்ளே நாட்டு மக்களின் எதிர்ப்பை அரசாங்கம் சம்பாதித்துக் கொண்டது” என்றார்.

“மேலும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் ஊடக சுதந்திரம், தனிமனித சுதந்திரம், போராடும் சுதந்திரம் உள்ளிட்ட அரசைமப்பில் உள்ள சுதந்திரங்கள் கூட இல்லாதுபோகுமென எதிர்பார்க்கப்பட்டது. அது அப்படியே தற்போது நடந்து வருகிறது.

“தனிமைப்படுத்தல் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் அனைத்தும் அடக்கியாள்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் பணிகளில், துறைசார் நிபுணர்களை இராணுவமே வழிநடத்துகிறது.

“இருக்கிறப் பிரச்சினைகளுக்கு மத்தியில் மேலும் பல பிரச்சினைகளை சேர்த்துக்கொண்டு, தன் தலையில் மண்ணை வாரியிரைத்துக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது” எனவும் தெரிவித்தார்.