ஆன்மிக தலங்கள் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

170 0

தமிழகத்தில் அடுத்தகட்டமாக ஆன்மிக தலங்கள் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சின்னமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கிவைத்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வணிக நிறுவன பணியாளர்கள், வியாபாரிகள் என அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக ஆன்மிக தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் கவனம் செலுத்தி அங்குள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை, ராமேஸ்வரம், நாகூர், வேளாங்கண்ணி மற்றும் சின்னமலை ஆகிய பகுதிகளில் வரும் ஜூலை மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள கரியாம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு குழந்தைகள் நல காப்பகத்தில் 43 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் அனைவரும் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி மற்றும் எழிச்சூர் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர்.
தற்போது அவர்கள் அனைவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த குழந்தைகள் யாருக்கும் டெல்டா பிளஸ் வகை வைரஸ் தாக்கம் இல்லை. தமிழகத்தில் குழந்தைகளை நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் 5 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தைக்கு 3 தவணைகளில் நியூமோ கோக்கைல் என்ற தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியுள்ளது.
ஒரு தவணை தடுப்பூசிக்கு குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரம் வீதம் ஒரு குழந்தைக்கு ரூ.12 ஆயிரம் வரை செலவழிக்கவேண்டிய நிலை இருந்தது. தற்போது, தமிழகத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட சுமார் 9.23 லட்சம் குழந்தைகளுக்கு இலவசமாக நியூமோ கோக்கைல் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த வாரம் பூந்தமல்லியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. படிப்படியாக மாநிலத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இத்தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.