மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் திருக்குறள் விளக்கத்துடன் கூடிய பலகை- பயணிகள் வரவேற்பு

323 0

பல்லவன் பணிமனை உள்ளிட்ட மாநகரில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்படும் பஸ்களில் இந்த பலகை பொருத்தும் பணி நடந்து வருகிறது.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள 19 ஆயிரத்து 700 பஸ்களில் 14 ஆயிரத்து 215 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பஸ்கள் தற்போது இயக்கப்படவில்லை.

இந்த பஸ்கள் தற்போது 50 சதவீதம் இருக்கைகளுடன், மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் அரசு விதித்துள்ள வழிக்காட்டு முறைகளான கட்டாய முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பயணித்து வருகின்றனர்.

இந்தநிலையில், அனைத்து அரசு பஸ்களிலும் திருக்குறளுடன் விளக்க உரையும் வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதனடிப்படையில் சென்னை மாநகரில் இயக்கப்படும் மாநகர பஸ்களில் திருக்குறள் மற்றும் அதனுடைய விளக்கம் சேர்ந்த பலகைகள் அனைத்து பஸ்களிலும் டிரைவர் சீட்டுக்கு அருகில் பொருத்தப்பட்டு வருகிறது. இதனை பயணிகளும் ஆர்வமாக பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் அனைத்து அரசு பஸ்களில் பலகைகளில் எழுதப்பட்ட திருக்குறளுடன் விளக்க உரையை பஸ்களில் பொருத்தும் பணி நடந்து வருகிறது. பல்லவன் பணிமனை உள்ளிட்ட மாநகரில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்படும் பஸ்களில் இந்த பலகை பொருத்தும் பணி நடந்து வருகிறது. அடுத்த 10 நாட்களில் இந்த பணி முற்றிலுமாக நிறைவடையும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

இதுகுறித்து பாரிமுனை பஸ் நிலையத்தில் பயணம் செய்த பயணி அமுதா கூறும்போது, “பஸ் பயணத்தின் போது நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில் திருக்குறள் மற்றும் விளக்க உரையை அறிந்து கொள்ள முடிகிறது. அதுவும் குறிப்பாக தினசரி பயணத்தின்போது திருக்குறளின் விளக்கத்தை குழந்தைகளுக்கு கற்று தருவதன் மூலம் தினசரி ஒரு குறள் வீதம் அனைத்து குறளையும் குழந்தைகள் மனப்பாடம் செய்து கொள்ளவும் முடியும். இதனை நாங்கள் முழுமனதுடன் வரவேற்கிறோம்” என்றார்.