அறுவை சிகிச்சைக்காக போப் பிரான்சிஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி

248 0

கடந்த வாரம் வழிபாட்டில் பங்கேற்ற மக்களிடம், தனக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 84) கடந்த சில நாட்களாக குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். குறிப்பாக பெருங்குடல் சுருக்கம் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார்.

எனவே இதற்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமெல்லி ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

போப் பிரான்சிசுக்கு எப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்ற விவரம் தெரியவில்லை. எனினும் அறுவை சிகிச்சை முடிந்ததும் அது குறித்த தகவல் வெளியிடப்படும் என வாடிகன் அறிவித்து உள்ளது. நேற்று ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பாக வழக்கமான ஞாயிறு வழிபாட்டில் அவர் பங்கேற்றார். அதில் கலந்துகொண்ட மக்களுக்கு மகிழ்ச்சியுடன் அவர் ஆசிகளையும் வழங்கினார். அப்போது இந்த அறுவை சிகிச்சை குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

அதேநேரம் கடந்த வாரம் வழிபாட்டில் பங்கேற்ற மக்களிடம், தனக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த அறுவை சிகிச்சை குறித்தே அவர் இத்தகைய வேண்டுகோள் விடுத்திருந்ததாக கருதப்படுகிறது.