பஸிலால் நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது-சுதந்திரக் கட்சி

175 0

பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதாலோ, அமைச்சரவையை மறுசீரமைப்பதன் ஊடாகவே இந்நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. எனவே, தற்போதுள்ள சிஸ்டத்தில் மாற்றம் அவசியம். அந்த மாற்றத்தை ஜனாதிபதியால்கூட செய்ய முடியாதுள்ளது. என்று அரச பங்காளிக் கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

அமைச்சரவை மறுசீரமைப்பு உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே சு.கவின் பொதுச்செயலாளரான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நாட்டில் தற்போது பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. அவை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திட்டமிட்டுள்ளது. சந்திப்புக்கான திகதியும் கோரப்பட்டுள்ளது. இதன்படி அரசியல் பிரச்சினை, உரப் பிரச்சினை, வெளிவிவகாரக் கொள்கை மற்றும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம்.

அமைச்சுப் பதவிகளை மாற்றுவதன் மூலமோ, அமைச்சரவை மறுசீரமைப்பு ஊடாகவோ இந்நாட்டிலுள்ள பிரச்சினைகள் தீரப்போவதில்லை. சிஸ்டத்தில்தான் (முறைமையில்) பிரச்சினை உள்ளது. அந்த சிஸ்டத்தை மாற்றியமைப்பார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்கப்பட்டது. எனினும், சிஸ்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஜனாதிபதிக்கும் சிற்சில பிரச்சினைகள் இருப்பதை உணரமுடிகின்றது. குறிப்பாக அரசியல் ரீதியில் அவருக்குக் கட்சிப் பலம் இல்லை என்பது பிரதான காரணியாகும்.

பிரச்சினைகளைத் தீர்க்கவே அமைச்சரவை நியமிக்கப்பட்டது. அதற்கான வழிகளைத் தேட வேண்டும். அதனைவிடுத்து அமைச்சரவை மறுசீரமைப்பு மூலம் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என நாம் நம்பவில்லை.

அதேவேளை, பஸில் ராஜபக்ச அமைச்சு பதவியை வகிக்காவிட்டாலும் அதிகாரம் படைத்தவராகவே விளங்குகின்றார். கொரோனா தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானியாகவும் அவர் செயற்படுகின்றார். எல்லாப் பிரச்சினைகளின்போதும் தலையீடுகளைச் செய்தார். எனவே, நாடாளு மன்றம் வந்து விசேடமாக எதனையும் செய்யப்போவதில்லை. அவர் நாடாளுமன்றம் வருவதை நாம் எதிர்க்கவில்லை. எனினும், வந்தால் புதிதாக எந்தப்  பிரச்சினையும் தீரப்போவதில்லை. சிஸ்டத்தில்தான் பிரச்சினை உள்ளது. அதனை மாற்ற வேண்டும். பயந்து வேலையில்லை. இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் இறப்பர் முத்திரைகளாகியுள்ளனர்” – என்றார்.