பஷில் வருகைக்கு பின்னர் அரசியலில் மாற்றங்கள் ஏற்படும் – ரோஹித அபேகுணவர்தன

173 0

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் ஒத்துழைப்பு அவசியமானதாகும். பஷில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகைக்கு பின்னர் அரசியல் மட்டத்தில் பல மாற்றங்கள் ஏற்படும் என துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் நாடா+ளுமன்ற வருகை குறித்து எதிர் தரப்பினரே அதிக அச்சம் கொண்டுள்ளார்கள். முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் பொருளாதார விவகாரங்களை இவரே பொறுப்பேற்றார். அக்காலக்கட்டத்தில் பல சவால்கள் காணப்பட்டன. அனைத்து சலால்களுக்கும் மத்தியில் தேசிய பொருளாதாரம் சீரான நிலையில் முன்னேற்றமடைந்தது.

அரசாங்கம் தோல்வி என எவராலும் குறிப்பிட முடியாது. கொவிட் -19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் அரசாங்கம் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது. தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் அபிவிருத்தி செயற்திட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்கிறது. நாட்டின் அபிவிருத்தி பணிகள் எக்காரணிகளுக்காகவும் தடைப்படாது.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தும் வகையில் அமையும். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று பலமான அமைச்சு பதவியை பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர் பல முறை எடுத்துரைத்துள்ளார்கள். சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தை செயற்படுத்த வேண்டுமாயின் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று அரசியலில் செல்வாக்கு செலுத்த வேண்டும்.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ இவ்வாரம் நாடாளுமன்ற உறுப்பினாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரது நாடாளுமன்ற வருகையை தொடர்ந்து அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சி உறுப்பினர்கள் கூட்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஒரு சில பங்காளி கட்சி தலைவர்களின் செயற்பாடுகள் கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் அமைகிறது என்றார்.