5வது டி20 போட்டி- வெஸ்ட் இண்டீசை 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்பிரிக்கா

298 0

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டி காக், மார்கிராம் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 5-வது 20 ஓவர் போட்டி செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடந்தது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய கேப்டன் பவுமா டக் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டி காக் உடன் மார்கிராம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை பதம்பார்த்தது. இதனால் ரன் வேகம் அதிகரித்தது.
இருவரும் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தனர். அணியின் எண்ணிக்கை 128 ஆக இருக்கும்போது டி காக் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து மார்கிராம் 70 ரன்னில் வெளியேறினார்.
அரை சதமடித்த டி காக்
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எவின் லெவிஸ் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்து அவுட்டானார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் நிகிடி 3 விக்கெட்டும், ரபாடா, மூல்டர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 3-2 என்ற கணக்கில் டி 20 தொடரை கைப்பற்றி அசத்தியது. ஆட்டநாயகன் விருது மார்கிராமுக்கும், தொடர் நாயகன் விருது தப்ராஸ் ஷம்சிக்கும் அளிக்கப்பட்டது.