பருத்தித்துறையில் மேலும் நால்வருக்கு கொரோனா; ஒருவர் உயிரிழப்பு

359 0

பருத்தித்துறை – தும்பளைப் பகுதியில் ஒரே குடும்பப் பின்னணியில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அந்தத் தொற்றாளர்களின் அயலில் வசிக்கும் உயிரிழந்த முதியவர் உட்பட மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்டு முன்னதாக தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் தொடர்புபட்டு, தும்பளை – கணக்கிலாவத்தைப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரே குடும்பப் பின்னணி கொண்ட 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேருக்கு கடந்த தினத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பருத்தித்துறை சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த தொற்றாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டுக்கு அருகில் வசித்து வந்த முதியவர் ஒருவர் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட நோய் பாதிப்புக்குள்ளாகி இருந்த நிலையில் நேற்று முன் தினம் அதிகாலை வேளை உயிரிழந்தார்.

உயிரிழந்த முதியவரின் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டிருந்த தகவல் கிடைக்கப் பெற்றதை அடுத்து அவர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு பருத்தித்துறை சுகாதாரப் பிரிவினரால் உட்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த முதியவர் உட்பட மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பருத்தித்துறை சுகாதாரப் பிரிவினரால்தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த முதியவர் மற்றும் அவரது மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் நால்வருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து உயிரிழந்த முதியவரின் உடல் சுகாதாரத் தரப்பின் வழிகாட்டுதலில் யாழ். கோம்பயன் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவிருப்பதாகவும்,இந்தத் தொற்றாளர்கள் மற்றும் மரண நிகழ்வில் பங்கேற்றவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் பருத்தித்துறை சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.