ராம மோகனராவ் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளார். இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கண்ணாம்பூச்சி விளையாட்டு நடந்து வருகிறது. தற்போது ராம மோகனராவ் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளார். இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். அதே நேரத்தில் அரசு அதிகாரிகளும் மக்களின் நம்பகத்தன்மையை பெறும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டும்.அரசு அதிகாரியின் வீட்டிலேயே பல முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டு உள்ளதால் மக்கள் மத்தியில் அதிகாரிகளின் நம்பகத்தன்மை மிகவும் குறைந்து விட்டது.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தி.மு.க. கடந்த சில ஆண்டுகளாக அரசியல் லாபத்திற்காக போராட்டம் நடத்தி வருகிறது. இதைப் போல அ.தி.மு.க. அரசும், மத்திய அரசும் இந்த பிரச்சனையை தொடர்ந்து வலியுறுத்தாமலும், காளையை காட்சிபடுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்காமலும் காலம் தாழ்த்தி வருகின்றன.காவிரி பிரச்சனையிலும் தமிழக அரசின் செயல்பாடு திருப்தி அளிக்க கூடியதாக இல்லை. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இறந்த பிறகு தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது உண்மை. அதை யாராலும் ஈடுசெய்ய இயலாது. தமிழகத்தின் ஜீவநாடி பிரச்சனையை எல்லாம் ஜெயலலிதா துணிந்து முடிவு எடுத்து வெற்றியும் பெற்று உள்ளார்.
மக்கள் நலக்கூட்டணி நீடிக்காது என கடந்த சட்டமன்ற தேர்தலின் போதே நான் கூறியிருந்தேன். இன்றைக்கு அது உண்மையாகி உள்ளது. அன்றைக்கு அந்த கூட்டணியை உருவாக்கியவரும் வைகோ, இன்றைக்கு அந்த கூட்டணியில் உள்ள கட்சிகளை நட்டாற்றில் விட்டு விட்டு கூட்டணியை விட்டு வெளியே வந்த வரும் வைகோதான். வைகோ அடிக்கடி நிலை மாறுபவர் என்பதை நிரூபித்துள்ளார்.இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.

